இந்தியா ஆட்டோமொபைல் துறை கோவிட்-19 பரவலுக்கு முன்னரே தடுமாற்றத்தை சந்தித்துவந்தது. விற்பனை குறைந்ததால் டிவிஎஸ், மாருதி போன்ற நிறுவனங்கள் வேலையில்லா நாள்களை கடைப்பிடித்தன.
இந்நிலையில், மார்ச் 25ஆம் தேதி முதல் நாடு முழுவதும் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் ஆட்டோமொபைல் மட்டுமின்றி அனைத்து தொழில் துறைகளும் முற்றிலும் முடங்கியுள்ளன. தற்போது, ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மெதுவாக இயல்புநிலை திரும்பிவருகிறது.
இருப்பினும், பொருளாதார நிச்சயமின்மை காரணமாக கார் போன்ற அத்தியாவசியமற்ற செலவுகளை மேற்கொள்ள மக்கள் விரும்புவதில்லை. இதனால் கார் நிறுவனங்களும் தங்கள் உற்பத்தியை பெருமளவு குறைந்துக்கொண்டுவிட்டன.
மாருதி சுசூகி நிறுவனம் தனது உற்பத்தியை 97.54 விழுக்காடு வரை குறைத்துள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்தாண்டு மே மாதம் வரை 1,51,188 வாகனங்களை மாருதி நிறுவனம் உற்பத்தி செய்திருந்த நிலையில், இந்தாண்டு மே மாதம் வெறும் 3,714 வாகனங்களை மட்டுமே உற்பத்தி செய்துள்ளது. குறிப்பாக கார்களின் உற்பத்தி கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் 97.53 விழுக்காடு குறைந்து 3,652ஆக உள்ளது.
கடந்தாண்டு, சிறிய ரக கார்களான ஆல்டோ, எஸ்-பிரஸ்ஸோ போன்ற மாடல்களில் 23,874 கார்கள் உற்பத்தி செய்யப்பட்டன. இந்தாண்டு இந்த மாடல்களில் வெறும் 401 கார்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டன.
அதேபோல 1,950 நடுத்தர ரக கார்களும் (97.69 விழுக்காடு சரிவு), 928 எஸ்யுவி கார்களும் (96.25 விழுக்காடு சரிவு) மட்டுமே மே மாதம் வரை உற்பத்தி செய்யப்பட்டன.
ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டைத் தொடர்ந்து, மாருதி சுசூகி நிறுவனம் இந்தியாவிலுள்ள தனது மூன்று தொழிற்சாலைகளிலும் உற்பத்தியை தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மகேந்திராவுடன் கைகோக்கும் மாருதி: கார் விற்பனை அதிகரிக்குமா?