மும்பை: டெஸ்லா நிறுவனம் தங்கள் மாநிலத்தில் முதலீடு செய்யும்படி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக மகாராஷ்டிரா சுற்றுலாத் துறை அமைச்சர் ஆதித்யா தாக்ரே தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா எனும் கார் நிறுவனத்தை கிளை நிறுவனமாகக் கொண்டுள்ளது. அதாவது மின்சார வாகனங்களை தயாரிக்கும் பணியில் தங்களை ஈடுபடுத்தியுள்ள டெஸ்லா நிறுவனம், உலகிலேயே தலைசிறந்த பேட்டரிகளையும், சூரிய ஒளி தகடுகளையும் தயாரிக்கும் முயற்சியில் கடைசி கட்டத்திலுள்ளது.
இந்த தொழில்நுட்பத்தின் மூலம் தாங்கள் முன்பு வெளியிட்ட மின்சாரக் கார்களை விட அதிதிறன் கொண்ட வாகனங்களை சாலைகளில் அலங்கரிக்க டெஸ்லா முயன்றுவருகிறது. இச்சூழலில் தங்களின் வியாபாரத்தை விரிவுபடுத்த ஏற்ற தளங்களை நிறுவனம் கணித்து வந்த சூழலில், இந்திய வாகன சந்தையின் தேவைக் கருத்திற்கொண்டு, இந்தியாவில் முதலீடு செய்ய திட்டமிட்டது.
டெஸ்லா தனது திட்டத்தை வெளிப்படுத்தியவுடன், அனைத்து மாநிலங்களும் போட்டி போட்டுக் கொண்டு டெஸ்லாவுக்கு சிகப்பு கம்பளத்தை விரித்தது. இதுகுறித்து நிறுவன தரப்பிலிருந்து எந்த பதிலும் தெரிவிக்கப்படாத நிலையில், மகாராஷ்டிரா மாநிலமும் தங்களிடத்தில் முதலீடு செய்யும்படி கோரிக்கை வைத்துள்ளனர்.
அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் மட்டுமின்றி, சீனா உள்ளிட்ட ஆசிய நாடுகளிலும் டெஸ்லா வர்த்தகத்தை வலுப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. மேலும், இந்தியாவிலும் கார் விற்பனையை நேரடியாக தொடங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. ஆனால், இந்தியாவில் மின்சார கார்களுக்கான வரிவிதிப்பு முறை திருப்திகரமாக இல்லை என்று டெஸ்லா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஒருவழியாக 2021ஆம் ஆண்டு இந்தியாவில் தனது மின்சார கார்களை நேரடியாக விற்பனைக்கு கொண்டு வருவதற்கு டெஸ்லா முடிவு செய்துள்ளது. இதனை அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் எலான் மஸ்க் சமூக வலைதளம் வாயிலாக உறுதிப்படுத்தியிருக்கிறார்.