இந்தியாவில் கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மார்ச் இறுதி வாரம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கால் அனைத்துக் கடைகளும் மூடப்பட்டன. ஃபிளிப்கார்ட், அமேசான் போன்ற ஆன்லைன் ஷாப்பிங் தளங்களிலும் அத்தியாவசிய பொருள்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டன. முடி திருத்தும் கடைகள் அனைத்தும் மூடப்பட்டதால் ஆண்கள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள்.
இந்நிலையில் தற்போது பச்சை மற்றும் ஆரஞ்சு மண்டலங்களில் ஆன்லைன் ஷாப்பிங் தளங்களும் தனிக்கடைகளும் செயல்படலாம் என்று அரசு அறிவித்தது. அதைத்தொடர்ந்து ஃபிளிப்கார்ட் பச்சை மற்றும் ஆரஞ்சு மண்டலங்களில் ஆன்லைன் வர்த்தகத்தைத் தொடங்கியது.
இது தொடர்பாகஃபிளிப்கார்ட் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "கடந்த 15 நாள்களாகவே ட்ரிம்மர்களை வாடிக்கையாளர்கள் அதிகம் தேடியுள்ளனர். ஏப்ரல் முதல் வாரம் முதல் ட்ரிம்மர்களின் தேடல் 4.5 மடங்கு அதிகரித்துள்ளது. அதைத்தொடர்ந்து ஸ்மார்ட்போன்கள், கேஸ் அடுப்பு, ஃபேன்கள், ஏசி ஆகியவற்றின் தேடல் பலமடங்கு அதிகரித்துள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஃபிளிப்கார்ட் நிறுவனத்தின் துணைத் தலைவர் அணில் கூறுகையில், "தற்போது எங்கள் தளங்களின் மின்சாதன பொருள்களின் விற்பனை அதிகரித்துள்ளது. குறிப்பாக ஏசி, ஸ்மார்ட்போன்களின் விற்பனை அதிகரித்துள்ளது. வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்யும் பொருள்களை அவர்களின் வீட்டிற்க்கே பாதுகாப்பாக டெலிவரி செய்யும் பணிகளை மேற்கொண்டுவருகிறோம்" என்றார்.
மேலும், மக்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் நாட்டிலுள்ள பல லட்சம் விற்பனையாளர்களுடனும் சிறு குறு தொழில் முனைவோர்களுடனும் இணைந்து பணியாற்றவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பெட்ரோல், டீசல் வரியை உயர்த்திய மத்திய அரசு!