தெற்கில் எலுமிச்சை சாதம், கிழக்கில் கிச்சடி தொக்கு மற்றும் வடக்கில் காடி சாவல் என, இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலாக் கழகத்தில் முழு அடைப்பு அறிவிக்கப்பட்டதில் இருந்து மக்களின் உள்ளூர் உணவின் சுவையை மனதில் கொண்டு பலவகையான உணவுகளை வழங்கியுள்ளது.
மார்ச் 28ஆம் தேதி தொடங்கி இதுவரை ஒரு லட்சத்து 86 ஆயிரத்து 140 உணவு பொட்டலங்களை தேவைப்படுபவர்களுக்கு வழங்கியுள்ளது. உணவுகளை எங்களின் சமையலறைகளில் தயாரிக்கப்பட்டு வருவதாக ஐ.ஆர்.சி.டி.சி செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
நாடு முழுவதும் உள்ள ஐ.ஆர்.சி.டி.சியின் 13 சமையலறைகள் இதற்கான ஒருங்கிணைக்கும் இடமாக மாறியுள்ளது. இந்தச் சமையலறைகள் அமைந்துள்ள இடங்களிலிருந்து மொத்தமாக சமைத்த உணவு காகிதத் தட்டுகளில் வழங்கப்படுகிறது.
இதுகுறித்து ரயில்வே அமைச்சகம் கூறுகையில், மார்ச் 28ஆம் தேதி இரண்டு ஆயிரத்து 500 உணவு பொட்டலங்களுடன் தொடங்கி, மார்ச் 29 அன்று 11 ஆயிரத்து 30 உணவுப் பொட்டல்களையும், மார்ச் 30 அன்று 20 ஆயிரத்து 320 உணவுப் பொட்டலங்களையும், மார்ச் 31 அன்று 30 ஆயிரத்து 850 உணவுப் பொட்டலங்களையும் இந்திய ரயில்வேயின் கேட்டரிங் பிரிவு தயாரித்து விநியோகித்துள்ளது.
மேலும், ஏப்ரல் 1ஆம் தேதி 37,370 உணவு பொட்டலங்கள், ஏப்ரல் 2ஆம் தேதி 40 ஆயிரத்து 870 உணவு பொட்டலங்கள், ஏப்ரல் 3ஆம் தேதி 43 ஆயிரத்து 100 உணவு பொட்டலங்களை வழங்கியுள்ளதாக, ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆர்.பி.எஃப் (ரயில்வே பாதுகாப்புப் படை) ஏழை மக்களுக்கு உணவு விநியோகத்தில் பெரியளவில் ஈடுபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'வீடு தேடி வரும் உயிர் காக்கும் மருந்துகள்'- இதுதான் கேரள போலீஸ்!