உலகின் பல்வேறு நாடுகளிலும் கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த மார்ச் இறுதி வாரத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பல்வேறு நாடுகளிலும் விமான சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டன. அதேபோல் இந்தியாவிலும் மார்ச் இறுதி வாரம் முதல் அனைத்து விமான நிறுவனங்களும் தங்கள் சேவைகளை நிறுத்திக் கொண்டன.
ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டைத் தொடர்ந்து மே இறுதி வாரத்தில் உள்நாட்டு விமான சேவை, பல்வேறு கட்டுப்பாடுகளுடன் மீண்டும் தொடங்கப்பட்டது. உள்நாட்டு விமான சேவை தொடங்கப்பட்டு சுமார் மூன்று மாதங்கள் ஆகியிருந்தாலும், இதுவரை உள்நாட்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கை மந்தமாகவே இருந்து வருகிறது.
ஜனவரி முதல் ஜூலை வரையிலான அரையாண்டு காலகட்டத்தில் 3.72 கோடி பேர் உள்நாட்டு விமானப் பயணத்தை மேற்கொண்டுள்ளனர். இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 84.84 விழுக்காடு குறைவு. குறிப்பாக, ஜூலை மாதத்தில் மட்டும் உள்நாட்டு விமான சேவை 82.3 விழுக்காடு வரை குறைந்துள்ளதாக சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
நாட்டின் மிகப் பெரிய விமான நிறுவனமாக இண்டிகோ, தன் இடத்தை இன்று வரை தக்கவைத்து, உள்நாட்டு விமானப் போக்குவரத்து சந்தையில் 60.4 விழுக்காட்டை தன்வசம் வைத்துள்ளது. அதேபோல் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் சந்தை இருப்பு ஆறு விழுக்காட்டில் இருந்து 16.9ஆக உயர்ந்துள்ளது, ஏர் இந்தியா (9.1 விழுக்காடு) மூன்றாம் இடத்தில் உள்ளது.
ஒரு விமானத்தின் எத்தனை இருக்கைகள் நிரம்புகின்றன என்பதைப் பொறுத்தே விமான நிறுவனங்களின் லாபம் இருக்கும். அந்த வகையில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் சராசரியாக தனது விமானத்தில் 70 விழுக்காடு இருக்கைகளை நிரப்புகின்றன. இதில் இண்டிகோ (60.2 விழுக்காடு), ஏர் ஏசியா(53.1 விழுக்காடு), கோ ஏர்(50.5 விழுக்காடு) முறையே அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.
2020, 2021ஆம் ஆண்டுகளில் உள்நாட்டு விமான சேவையானது 41 முதல் 45 விழுக்காடு வரை சரிவைச் சந்திக்கும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
கரோனா காலத்தில் சர்வதேச, உள்நாட்டு விமானங்கள் ரத்து, தனிமைப்படுத்துதல் விதிமுறைகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் காரணமாக விமான நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வாட்ஸ்அப் மூலம் இனி செக் இன் செய்யலாம் - ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அறிவிப்பு