ஐ.எம்.எஃப். (IMF) என்றழைக்கப்படும் பன்னாட்டு நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் ஆண்டுக்கூட்டம் நடக்கவிருக்கும் நிலையில், பன்னாட்டு நாணய நிதியத்தின் தலைவர் கீதா கோபிநாத் உலகப் பொருளாதார சூழல் குறித்த தனது கணிப்புகளை பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசியதாவது:
உலகப் பொருளாதாரம் தற்போது சீராக வளர்ச்சியடைந்து வந்தாலும் மிகவும் பலமற்றதாகவே உள்ளது. சீனா மற்றும் இந்தியாவின் வளர்ச்சி காரணமாக 2020-க்கு பின் உலகின் பொருளாதார வளர்ச்சி மூன்று சதவிகிதம் என்ற அளவுக்கு நிலையாக இருக்கும். வளர்ந்துவரும் பொருளாதார நாடுகளின் வளர்ச்சி விகிதம் ஐந்து சதவிகிதம் என்ற அளவுக்கு நிலையாக இருக்கும்.
அதேபோல், குறைந்த வருவாய் கொண்ட நாடுகளின் வளர்ச்சியும் சீராக இருக்கும். ஆசிய கண்டம் மற்ற பகுதிகளைவிட வேகமாக வளர்ந்து வருகிறது. தற்போதைய சூழலில் பொருளாதார மந்த நிலை ஏற்பட வாய்ப்பில்லை என்றாலும் பல ஆபத்துகளும் இருக்கின்றன. பொருளாதார போர்கள் சர்வதேச சந்தையில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.
அதே நேரத்தில் தவறான கொள்கை முடிவுகள் அரசுகள் தவிர்க்க வேண்டும். வளர்ச்சியை ஏற்படுத்தும் விதமாகவும், தேவை மற்றும் செலவுகளையும் அனுசரித்து நிதிக் கொள்கைகளை திட்டமிட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கீதா கோபிநாத் இந்திய வம்சாவழியைச் சேர்ந்த அமெரிக்கர் என்பது குறிப்பிடத்தக்கது.