2021ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான சரக்கு மற்றும் சேவை வரி வசூல் குறித்த புள்ளி விவரத்தை மத்திய நிதியமைச்சகம் தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி, ஜனவரியில் நாட்டின் சரக்கு மற்றும் சேவை வரி வசூல் வரலாறு காணாத உயர்வைக் கண்டுள்ளது. மொத்த சரக்கு மற்றும் சேவை வரி வசூல் ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 847 கோடி ரூபாயாக கணக்கிடப்பட்டுள்ளது.
அதில், மத்திய சரக்கு மற்றும் சேவை வரி வசூல் 21 ஆயிரத்து 923 கோடி ரூபாயாக உள்ளது. மாநில சரக்கு மற்றும் சேவை வரி வசூல் 29 ஆயிரத்து 14 கோடி ரூபாயாகவும், ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி வசூல் 60 ஆயிரத்து 288 கோடி ரூபாயாக உள்ளது. மேலும் செஸ் வரி வசூல் எட்டாயிரத்து 124 கோடி ரூபாயாக கணக்கிடப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாத பொதுமுடக்கம் அறிவிப்புக்குப்பின் நாட்டின் பொருளாதாரம் பெரும் பாதிப்பைச் சந்தித்த நிலையில், கடந்த சில மாதங்களாகப் பொருளாதார நடவடிக்கைகள் மேம்பட்டுவருகின்றன. அதன் நீட்சியாகவே, சரக்கு மற்றும் சேவை வரி வசூல் தற்போது வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது.
இதையும் படிங்க: நாட்டின் பொருளாதார நிலை என்ன? தலைமைப் பொருளாதார ஆலோசகருடன் சிறப்பு நேர்காணல்