ஊரடங்கு காரணமாக இந்தியாவில் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொருளாதாரத்தை மீட்டெடுக்கத் தன்னிறைவு இந்தியா என்ற பொருளாதார ஊக்குவிப்பு திட்டத்தைச் செவ்வாய்க்கிழமை இரவு பிரமதர் மோடி அறிவித்தார்.
இந்தப் பொருளாதார ஊக்குவிப்பு திட்டம் குறித்த தகவல்களைத் தினமும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுவருகிறார். அதன்படி வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், வீட்டுவசதி துறைக்காக ரூ.70 ஆயிரம் கோடி மதிப்பிலான அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.
அதன்படி, ரூ.6 லட்சம் முதல் ரூ.18 லட்சம் வரை வருமானம் பெறும் நடுத்தர வர்க்கத்தினர், வீடுகளை வாங்குவதை ஊக்குவிக்கும் நோக்கில் வழங்கப்பட்டுவரும் கடன் மானியத் திட்டம் மார்ச் 2021ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
2017ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட இத்திட்டம் மூலம் இதுவரை 3.3 லட்சம் மக்கள் பயனடைந்துள்ளனர். இப்போது இத்திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளதால் கூடுதலாக 2.5 லட்சம் மக்கள் பயன்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இத்திட்டத்தால் இரும்பு, சிமெண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருள்களின் தேவைகளும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.10 ஆயிரம் சிறப்புக் கடன் வழங்கும் திட்டத்தையும் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். ரூ.5 ஆயிரம் கோடி மதிப்பிலான இத்திட்டத்தின் மூலம் 50 லட்சம் பேர் பயனடைவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
நபார்டு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு ரூ.30 ஆயிரம் கோடிக்கு சிறப்புக் கடன் வழங்கப்படும் என்றும், இதன்மூலம் மூன்று கோடி விவசாயிகள் பயன்பெறுவார்கள் என்றும் அவர் அறிவித்தார்.
வீட்டுக்கடன் மானியத் திட்டத்தை மத்திய அரசு மார்ச் 2021ஆம் ஆண்டு வரை நீட்டித்துள்ளதால், குறைந்த விலை வீடுகளின் தேவை அடுத்த சில ஆண்டுகளில் அதிகரிக்கும் என்று துறைசார்ந்த நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: புலம்பெயர்ந்த தொழிலாளர் திட்டங்களுக்கு ரூ.3500 கோடி ஒதுக்கீடு