தரவு உள்ளூர்மயமாக்கல், சேமிப்பு மற்றும் பகிர்வு தொடர்பான ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களை கூகுள் பே நிறுவனம் மீறியதற்காக கூகுள் பே மீது நடவடிக்கை எடுக்கக்கோரி டெல்லி நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு பதிலளிக்கக்கோரி கூகுள் பே நிறுவனத்திற்கு நீதிமன்றம் நோட்டீஸ் வழங்கியது.
அதற்கு அந்த நிறுவனத்தின் சார்பில், மூன்றாம் தரப்பினரிடம் வாடிக்கையாளர்களின் பணப்பரிவர்த்தனை விவரங்களை கூகுள் பே நிறுவனம் பகிராது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அதில் வாடிக்கையாளர்களின் பணப்பரிவர்த்தனை தரவை மூன்றாம் தரப்பினருடன் NPCI, கட்டண சேவை வழங்கும் (PSP) வங்கிகளின் முன் அனுமதியுடன் பகிர்ந்து கொள்ள அனுமதிக்கப்படுவதாகக் கூறியது.
இது குறித்து கூகுள் பே நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், ''இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) சார்பாக வழங்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (யுபிஐ) நடைமுறை வழிகாட்டுதலை கூகுள் பே நிறுவனம் முழுமையாக பின்பற்றிவருகிறது. அதேபோல் வாடிக்கையாளர்களின் பணப்பரிவர்த்தனைகளை மூன்றாம் தரப்பினரோடு பகிர்வதில்லை'' என்றார்.
இந்த வழக்கு தொடர்பாக ரிசர்வ் வங்கி (ரிசர்வ் வங்கி) இதுவரை பதில் மனு தாக்கல் செய்யவில்லை என்பதால், உயர் நீதிமன்றம் இந்த விசாரணையை நவம்பர் 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
இதையும் படிங்க: விவசாயிகளை அடிமைகளாக்கும் வேளாண் மசோதா - மத்திய அரசை சாடிய பிரியங்கா