டெல்லி: ஒன்றிய மற்றும் மாநில அரசின் தலையீட்டால் சமையல் பயன்பட்டிற்கான எண்ணெய் விலை குறைக்கப்பட்டுள்ளதாக உணவு வழங்கல் துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
உயர்ந்து வரும் சமையல் எண்ணெய் விலை உயர்வால், பொதுமக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். இதனை கருத்திற்கொண்டு பாமாயில், சோயாபீன் எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றுக்கான அடிப்படை வரியை 2.5 விழுக்காட்டிலிருந்து, முழுவதுமாக நீக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
குறைக்கப்பட்ட வரி விழுக்காடு
மேலும், பாமாயில் எண்ணெய்க்கான வேளாண் வரி 20 விழுக்காடாக இருந்தது. அதனை தற்போது ஒன்றிய அரசு 7.5 விழுக்காடாகக் குறைத்துள்ளது.
முறையே சோயாபீன் எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றிற்கு 5 விழுக்காடாக வேளாண் வரி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேற்கண்ட வரி குறைப்பின் விளைவாக, பாமாயிலுக்கு 7.5 விழுக்காடும், சோயாபீன் எண்ணெய் மற்றும் சூரியகாந்தி எண்ணெய்க்கு 5 விழுக்காடும் மொத்த வரி விதிக்கப்படுகிறது.
சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் எண்ணெய், சுத்திகரிக்கப்பட்ட சோயாபீன் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றின் அடிப்படை வரி 32.5 விழுக்காட்டில் இருந்து 17.5 விழுக்காடாகக் குறைக்கப்பட்டுள்ளது.
குறைக்கப்படுவதற்கு முன்பு, அனைத்து வகையான சமையல் எண்ணெய்கள் மீதான விவசாய உள்கட்டமைப்பு வரி 20 விழுக்காடாக இருந்தது. குறைக்கப்பட்ட பிறகு, பாமாயில் மீதான பயனுள்ள வரி 8.25 விழுக்காடாகவும், சோயாபீன் எண்ணெய் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் வரி தலா 5.5 விழுக்காடாக இருக்கும்.
நுகர்வோருக்கு நிவாரணம்
சமையல் எண்ணெய்களின் விலைகளைக் கட்டுப்படுத்த, பாமாயில், சூரியகாந்தி எண்ணெய், சோயாபீன் எண்ணெய் மீதான இறக்குமதி வரிகளை அரசாங்கம் பகுப்பாய்வு செய்துள்ளது. NCDEX வர்த்தக முகமையில் கடுகு எண்ணெயின் எதிர்கால வர்த்தகம் இடைநிறுத்தப்பட்டுள்ளது. மேலும், இருப்பு வரம்புகளும் விதிக்கப்பட்டுள்ளன என்றும் ஒன்றிய அமைச்சகம் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
"அதானி வில்மர், ருச்சி உள்ளிட்ட முக்கிய சமையல் எண்ணெய் தயாரிப்பு நிறுவனங்கள் மொத்த விற்பனை விலையை லிட்டருக்கு 4 முதல் 7 ரூபாய் வரை குறைத்துள்ளன. பண்டிகை காலங்களில் நுகர்வோருக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் விலை குறைக்கப்பட்டுள்ளது" என்று அரசு கூறியுள்ளது.
ஜெமினி எடிபிள்ஸ் & ஃபேட்ஸ் இந்தியா - ஹைதராபாத், மோடி நேச்சுரல்ஸ் - டெல்லி, கோகுல் ரீ-ஃபாயில்ஸ் அண்ட் சால்வென்ட், விஜய் சோல்வெக்ஸ், கோகுல் அக்ரோ ரிசோர்சஸ் மற்றும் என்.கே புரோட்டீன்கள் ஆகியவை சமையல் எண்ணெய்களின் மொத்த விலையைக் குறைத்துள்ளது என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு விலை ரூ. 266 உயர்வு