நடப்பு நிதியாண்டில், கரோனா ஏற்படுத்திய தாக்கம் காரணமாக இந்திய பொருளாதாரம் 7.7 விழுக்காடு சுருங்க வாய்ப்புள்ளதாக தேசிய புள்ளி விவர அலுவலகம் கணித்துள்ளது. கடந்த நிதியாண்டில், 4.2 விழுக்காடு வளர்ச்சி கண்டது.
அதன்படி, வேளாண்துறையை தவிர்த்து மற்ற அனைத்து துறை வருவாயும் குறைந்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், "கடந்த 2019-20ஆம் நிதியாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தி 145.66 லட்சம் கோடியாக இருந்தது. இந்தாண்டு, அது 134.40 லட்சம் கோடியாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இந்தாண்டுக்கான ஜிடிபி 7.7 விழுக்காடு சுருங்க வாய்ப்புள்ளது. அதேபோல், உற்பத்தித்துறை 9.4 விழுக்காடு சுருங்கவுள்ளது. கடந்தாண்டு, அத்துறை 0.03 விழுக்காடு வளர்ச்சி கண்டது. சுரங்கம் மற்றும் குவாரி, வர்த்தகம், போக்குவரத்து, தொலைத்தொடர்பு உள்ளிட்ட துறைகளின் வளர்ச்சியும் பெரிய அளிவில் சுருங்கும்.
அதற்கு நேர் எதிர்மாறாக, வேளாண்துறையில் 3.4 விழுக்காடு வளர்ச்சி ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அது கடந்தாண்டை விட 4 விழுக்காடு குறைவாகும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தாண்டின் முதல் காலாண்டில், பொருளாதாரம் 23.9 விழுக்காடும் இரண்டாவது காலாண்டில் 7.5 விழுக்காடும் சுருங்கியது குறிப்பிடத்தக்கது.