பி.எஸ்.என்.எல், எம்.டி.என்.எல் ஆகிய நிறுவனங்களை இணைக்க மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாட்டின் இரு பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனங்களான இவை நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. இவற்றை இணைப்பதன் மூலம் நிதிச்சுமை குறைக்கப்படும் என மத்திய அரசு எதிர்பார்க்கிறது.
பி.எஸ்.என்.எல் நிறுவனம் சுமார் 14,000 கோடி ரூபாய் நஷ்டத்திலும், எம்.டி.என்.எல் நிறுவனம் சுமார் 9,000 கோடி ரூபாய் நஷ்டத்திலும் இயங்கி வருகின்றன. இந்நிலையில் இவற்றை இணைப்பதன் மூலம் நிர்வாக செலவினங்கள் பெருமளவில் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் விரைவில் கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது.
இதுபோலவே நிதிச்சுமையில் சிக்கித் தவித்து வந்த பொதுத்துறை வங்கி நிறுவனமான பாரத ஸ்டேட் வங்கியின் கிளை வங்கிகள் ஒருங்கிணைக்கப்பட்டு பாரத ஸ்டேட் வங்கியின் கீழ் ஒன்றாக இணைக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாகவே பி.எஸ்.என்.எல் - எம்.டி.என்.எல் நிறுவனத்தின் இணைப்பும் பார்க்கப்படுகிறது.