கரோனா பரவல் காரணமாக மார்ச் இறுதி வாரத்திலிருந்து விமானப் போக்குவரத்திற்கு முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து மே மாதம் இறுதியில் உள்நாட்டு விமான சேவைகள் படிப்படியாகத் தொடங்க அனுமதியளிக்கப்பட்டது.
இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மட்டும் மொத்தம் 39.43 லட்சம் பேர் உள்நாட்டு விமான சேவையை பயன்படுத்தியுள்ளனர். கடந்த ஆண்டு, இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 65.8 விழுக்காடு குறைவு என்று விமானப் போக்குவரத்துத் துறை இயக்குனரகம் அறிவித்துள்ளது.
முன்னதாக, கடந்த அக்டோபர் 8ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய பயணிகள் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”கரோனா பரவலுக்கு முன் எவ்வளவு விமானங்கள் இயக்கப்பட்டனவோ அவற்றில் 75 விழுக்காடு விமானங்களை இயக்க விமான நிறுவனங்களுக்கு விரைவில் அனுமதியளிக்கப்படும்” என்றார்.
இருப்பினும், அடுத்த ஏழு முதல் பத்து நாள்கள் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்தால் மட்டுமே இந்த அனுமதி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு விமான சேவையை பொறுத்தவரை செப்டம்பர் மாதம், அதிகபட்சமாக ஸ்பைஸ்ஜெட் விமானங்களில் 73 விழுக்காடு இருக்கைகள் நிரம்பியிருந்துள்ளன. அதைத்தொடர்ந்து ஸ்டார் ஏர் விமானங்களில் 70.5 விழுக்காடு இருக்கைகளும், விஸ்தாராவில் 66.7 விழுக்காடு இருக்கைகளும், இண்டிகோவில் 65.4 விழுக்காடு இருக்கைகளும் நிரம்பியிருந்துள்ளன.
இந்தாண்டில் ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான சந்தைப் பங்கை பொறுத்தவரை 50.5 விழுக்காடுடன் இண்டிகோ முதலிடத்திலும், 15.6 விழுக்காட்டுடன் ஸ்பைஸ்ஜெட் இரண்டாவது இடத்திலும், 11.2 விழுக்காட்டுடன் ஏர் இந்தியா மூன்றாவது இடத்திலும் உள்ளன.
முன்னதாக சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் வெளியிட்ட தரவுகளின்படி, 28.32 லட்சம் பேர் ஆகஸ்ட் மாதம் உள்நாட்டு விமான சேவையைப் பயன்படுத்தியுள்ளனர். இது ஜூலை மாதத்தைவிட 33 விழுக்காடு அதிகம் என்றாலும், 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 76 விழுக்காடு குறைவாகும்.
இதையும் படிங்க : தங்கம் தெரியும், அது என்ன தங்கப் பத்திரம்? முதலீடு செய்வதற்கு முன் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்