கரோனா ஊரடங்கு(லாக்டவுன்) காரணமாக ஏற்பட்ட பொருளாதார முடக்கத்தை பொது மக்கள் சமாளிக்க ரிசர்வ் வங்கி, வங்கிக் கடன் தவணை செலுத்த ஆறு (2020 மார்ச் முதல் ஆகஸ்ட் வரை) மாத காலம் நீட்டித்து சலுகை வழங்கியது.
அதேவேளை, இந்த காலக்கட்டத்திற்கான தவணைத் தொகை, அதன் வட்டியில் எந்த தள்ளுபடியும் கிடையாது. அவற்றை பின்னர் செலுத்த வேண்டும் முதலில் மத்திய அரசு சார்பில் கூறப்பட்டிருந்தது. மக்களின் பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டு இந்த ஆறு மாத தவணைக் காலத்தில் வட்டிக்கான வட்டி தொகையை தள்ளுபடி செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இதையடுத்து பல்வேறு ஆலோசனைகளுக்குப் பின் இரண்டு கோடி ரூபாய்க்கும் கீழ் கடன் பெற்றவர்கள் மேற்கண்ட ஆறு மாத காலத்திற்கு தவணைக்கான வட்டிக்கான வட்டி தொகையை செலுத்த வேண்டியதில்லை, அதற்கு தளர்வு அளிக்கப்படும் என நீதிமன்றத்தில் பதில் அளித்தது. இந்நிலையில், இதற்கான வழிகாட்டு நடைமுறையை மத்திய நிதி சேவை துறை தற்போது வெளியிட்டுள்ளது.
அதன்படி, ரூ.2 கோடிக்கும் கீழ் கடன் பெற்ற அனைவரும் 2020ஆம் ஆண்டு மார்ச் 1 முதல் ஆகஸ்ட் 31 வரையிலான காலக்கட்டத்தில் செலுத்த வேண்டிய வட்டிக்கான வட்டி தொகையை செலுத்த வேண்டியதில்லை. இதன்மூலம் சிறு, குறு தொழில் நிறுவனம், கல்விக் கடன், வீட்டுக் கடன், கிரெடிட் கார்டு கடன், வாகன கடன் உள்ளிட்ட பிரிவுகள் கீழ், இரண்டு கோடிக்கு குறைவாக கடன் பெற்றவர்கள் இச்சலுகையை பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை வாரக்கடன் கணக்குகளுக்கு இந்த வட்டி சலுகை பொருந்தாது எனவும் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 16 மாநிலங்களுக்கு 6,000 கோடி ரூபாய் ஜிஎஸ்டி நிலுவைத் தொகை வழங்கிய மத்திய அரசு!