இந்திய சந்தையில் எப்போதும் டீசலைவிட ஐந்து முதல் 10 ரூபாய் வரை அதிக விலைக்கே பெட்ரோல் விற்பனை செய்யப்படும். இதனால் விலையைக் கருத்தில்கொண்டு, வணிக நோக்கத்தில் இயக்கப்படும் லாரி, கார் போன்ற வாகனங்கள் டீசல் என்ஜினைக் கொண்டு வடிவமைக்கப்பட்டன.
இந்நிலையில், கோவிட்-19 பரவல் காரணமாக மத்திய, மாநில அரசுகளின் வருவாய் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இதனால் வருவாயைப் பெருக்கும் நோக்கில் மத்திய, மாநில அரசுகள் கூடுதல் வரிகளை விதித்தன.
அதன்படி டெல்லி அரசு, பெட்ரோலுக்கு விதிக்கப்பட்டுள்ள மதிப்புக் கூட்டு வரியை 27 விழுக்காட்டிலிருந்து 30 விழுக்காடாகவும், டீசலுக்கு விதிக்கப்பட்டுள்ள மதிப்புக் கூட்டு வரியை 16.75 விழுக்காட்டிலிருந்து 30 விழுக்காடாகவும் அதிகரித்தது.
அதன்படி தற்போது டெல்லி அரசு, ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 17.71 ரூபாயையும், ஒரு லிட்டர் டீசலுக்கு 17.60 ரூபாயையும் மதிப்புக் கூட்டு வரியாக வசூலிக்கிறது. இது தவிர மத்திய அரசும், ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 32.98 ரூபாயும், டீசலுக்கு 31.83 ரூபாயும் கலால் வரி வசூலிக்கிறது.
இதனால், தற்போது டெல்லியில் ஒரு லிட்டர் டீசல் 79.40 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் பெட்ரோல் 79.76 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில், கடந்த சில நாள்களாகவே பெட்ரோலின் விலையைவிட டீசல் விலை அதிகமாக உயர்ந்து வருகிறது. அதேநிலை இந்திய சந்தையில் எதிரொலிக்கும் பட்சத்தில், விரைவில் பெட்ரோலைவிட அதிக விலைக்கு டீசல் விற்பனையாகும்.
இத்தனை ஆண்டுகளாக பெட்ரோலைவிட குறைந்த விலைக்கே டீசல் விற்பனையானது. இதனைக் கருத்தில் கொண்டே வணிக நோக்கங்களுக்காக இயக்கப்படும் லாரி, ட்ரக் போன்ற வாகனங்கள் வடிவமைக்கப்பட்டன. இந்தச் சூழலில், விலையில் ஏற்பட்டிருக்கும் இந்தத் தலைகீழ் மாற்றம் துறை சார்ந்த வல்லுநர்களைக் கடும் அதிருப்திக்குள்ளாக்கி உள்ளது.
ஏற்கனவே பெரும் தள்ளாட்டத்தை சந்தித்துவரும் இந்திய ஆட்டோமொபைல் துறை, இப்போது உருவாகியுள்ள இந்தச் சூழலால் இன்னும் பல நெருக்கடிகளை எதிர்கொள்ளும் என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: காணொலி காட்சி மூலம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் வருடாந்திர கூட்டம்