மார்ச் மாதத்தின் முதல் நாள் மஹாசிவராத்திரியை முன்னிட்டு இந்திய பங்குச்சந்தைகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. 'சிவ சிவ' என சிவனை நோக்கி நல்வழிதரவேண்டும் என வேண்டிக்கொண்டிருந்த பங்குச்சந்தைதாரர்களுக்கு நேற்றும்(மார்ச் 2) பலத்த அடி உண்டானது. தொடர்ந்து இன்று 8ஆம் நாளாக உக்கிரம் அடைந்த ரஷ்யா - உக்ரைன் போர் அமெரிக்கச் சந்தைகளில் காணப்படும் ஏற்ற, இறக்கம் கண்ணைக் கட்டும் கச்சா எண்ணெய் விலை உயர்வு என அதிர்ச்சி மேல் அதிர்ச்சித் தகவல்கள் காத்திருந்தன.
கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத வகையில் பன்னாட்டுச்சந்தையில் கச்சா எண்ணெய் விலை 115 டாலராக உயர்ந்தது. கடந்த ஜூன் 2014-க்குப்பின் இதுதான் உட்சபட்சவிலை எனக்கூறப்படுகிறது.மேலும், கச்சா எண்ணெய் விலை 120 டாலர் முதல் 150 டாலர் வரைகூட உயரலாம் என்ற தகவல் சற்றே கலக்கத்தை உண்டாக்க மீண்டும் பங்குச்சந்தைகள் சரிய ஆரம்பித்தன.
இன்றைய வர்த்தகத்தின் தொடக்கத்தில் சற்றே ஏறுமுகமாகத் தொடங்கினாலும் உலகச்சந்தைளின் இயல்பை ஒட்டி, தன்னை மாற்றிக்கொள்ள ஆரம்பித்தன. இந்தியச்சந்தைகள் ஏற்றம், இறக்கம் என மாறி மாறி காணப்பட்டது. வர்த்தகத்தின் முடிவில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 366 புள்ளிகள் குறைந்தும் தேசிய குறியீட்டு எண் நிஃப்டி 108 புள்ளிகள் குறைந்தும் முடிந்தன.
இன்றைய வர்த்தகத்தின் இறுதியில் பவர்கிரீட் கார்ப்பரேஷன், விப்ரோ, டெக் மகேந்திரா, ஹெச்.சி.எல் டெக்னாலஜி ஆகியவை சொற்ப லாபம் கொடுத்தன. போர் ஓயாதவரை ஏற்ற இறக்கங்கள் ஓயாது என சந்தை நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.