கோவிட்-19 என்னும் மாபெரும் கொடிய தொற்றுப் பரவலுக்கு உலகம் முழுவதும் சுமார் 30 லட்சம் மக்கள் பலியாகி உள்ளனர். ஆயினும் அது இந்திய முதலீட்டாளர்களின் ஆர்வ உணர்வுக்கு ஒன்றும் அணை போட்டு விடவில்லை. ஏனென்றால் கடந்த நிதியாண்டில் (2020-21) பொதுப் பங்குகளிலும், ரைட்ஸ் பங்குகளிலும் செய்யப்பட்டிருக்கும் முதலீடு முந்தைய நிதியாண்டோடு ஒப்பிடும்போது அதிகரித்திருக்கிறது என்பதை சமீபத்தில் நிதி அமைச்சகம் வெளியிட்டிருக்கும் தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன.
ஐபிஓ-க்கள் (ஆரம்பப் பொதுப்பங்கு வழங்கல்), மற்றும் எஃப்பிஓ-க்கள் (பின்தொடரும் பொதுப்பங்கு வழங்கல்) உட்பட பொதுப்பங்கு வழங்கல் மூலமாக திரட்டப்பட்ட நிதி முந்தைய நிதியாண்டை விட இரட்டிப்பாகி இருக்கிறது. மேலும் சிறப்புப் பரஸ்பர நிதி (unique mutual fund) முதலீட்டாளர்களின் எண்ணிக்கையும் பத்து சதவீதம் அதிகரித்திருக்கிறது.
இவை எல்லாம் கோவிட் உலகத்தொற்று அரக்கன் முதலீட்டாளர்களைப் பாதித்திடவில்லை என்பதையே காட்டுகிறது.
கடந்த நிதியாண்டில் (2020-21) ஐபிஓ-க்கள் உட்பட எல்லாப் பொதுப் பங்குகளின் மூலமும் ரூபாய் 46,000 கோடியையும், ரைட்ஸ் பங்குகளின் மூலம் ரூபாய் 64,000 கோடியையும் நிறுவனங்கள் திரட்டி இருக்கின்றன. முந்தைய நிதியாண்டோடு ஒப்பிடும்போது இவை முறையே 115 சதவீத, 15 சதவீத வளர்ச்சிகளைச் சந்தித்திருக்கின்றன.
முந்தைய நிதியாண்டான 2019-20-ல் நிறுவனங்கள் பொதுப் பங்குகளின் மூலம் ரூபாய் 21,382 கோடியையும், ரைட்ஸ் பங்குகளின் மூலம் ரூபாய் 55,670 கோடியையும் திரட்டி இருந்தன.
ஐபிஓ-க்கள், எஃப்பிஓ-கள், ரைட்ஸ் பங்குகள்
நிதி அமைச்சகம் திரட்டித் தந்திருக்கும் தரவுகளை ஆராய்ந்துப் பார்த்தால், முந்தைய நிதியாண்டான 2019-20-ல் நிறுவனங்கள் 60 ஐபிஓ-க்கள் (ஆரம்பப் பொதுப்பங்கு வழங்கல் - ரூபாய் 21,345.11 கோடி) மூலமாகவும், இரண்டு எஃப்பிஓ-க்கள் (பின் தொடரும் பொதுப்பங்கு வழங்கல் - ரூபாய் 37.24 கோடி) மூலமாகவும் ஆகமொத்தம் ரூபாய் 21,382.35 கோடித் தொகையைத் திரட்டி இருந்தன.
2020-21 நிதியாண்டில் நிறுவனங்கள் 55 ஐபிஓ-க்கள் (ஆரம்பப் பொதுப்பங்கு வழங்கல் - ரூபாய் 31,029.71 கோடி) மூலமாகவும், ஒரேவொரு எஃப்பிஓ (பின் தொடரும் பொதுப்பங்கு வழங்கல் - ரூபாய் 15,000 கோடி) மூலமாகவும் ஆகமொத்தம் ரூபாய் 46,029.71 கோடியைத் திரட்டி இருக்கின்றன.
2019-20-ல் 17 ரைட்ஸ் பங்கு வழங்கல்கள் மூலம் நிறுவனங்கள் ரூபாய் 55,669.79 கோடியைத் திரட்டின. அந்தத் தொகை 2020-21-ல் 21 ரைட்ஸ் பங்கு வழங்கல்கள் மூலம் 15 சதவீதம் உயர்ந்து ரூபாய் 64,058.61 கோடியைத் தொட்டது.
கணக்குப் போட்டுப் பார்த்தால், கடந்த நிதியாண்டில் நிறுவனங்கள் 55 ஐபிஒ-க்கள், 1 எஃப்பிஓ, 21 ரைட்ஸ் பங்கு வழங்கல்கள் மூலம் திரட்டிய ஒட்டுமொத்தத் தொகை ரூபாய் 1,10,088.31 கோடி. அதாவது முந்தைய நிதியாண்டை விட இது முதலீட்டுத் துறையில் 43 சதவீத வளர்ச்சி ஆகும்.
2019-20 நிதியாண்டில் நிறுவனங்கள் 60 ஐபிஒ-க்கள், 2 எஃப்பிஓ-க்கள், 17 ரைட்ஸ் பங்கு வழங்கல்கள் மூலம் திரட்டிய ஒட்டுமொத்தத் தொகை ரூபாய் 77,052 கோடியாகும்.
நிறுவனக் கடன்பத்திரச் சந்தை ஒளிர்கிறது
அதே சமயம், கடன்பத்திரச் சந்தை இன்னும் பிரகாமாக இருக்கிறது. கடந்த நிதியாண்டில் நிறுவனங்கள் 2.000-க்கு மேற்பட்ட கடன்பத்திரம் வழங்கல்கள் மூலம் ரூபாய் 7.82 லட்சம் கோடியைத் திரட்டி, 13. 5 சதவீத வளர்ச்சியை எட்டிப் பிடித்திருக்கின்றன. அதற்கு முந்தைய நிதியாண்டில் (2019-20), நிறுவனங்கள் 1,821 கடன்பத்திரம் வழங்கல்கள் மூலம் ரூபாய் 6.90 லட்சம் கோடியைத் திரட்டி உள்ளன.
பரஸ்பர நிதிச் சந்தை மினுமினுக்கிறது
அதைப் போன்ற நம்பிக்கைப் போக்கு பரஸ்பர நிதி முதலீட்டாளர்களிடமும் தென்பட்டிருக்கிறது. 2020 மார்ச் 31-ஆம் தேதி நிலவரப்படி 2.08 கோடியாக இருந்த சிறப்புப் பரஸ்பர நிதி முதலீட்டாளர்களின் எண்ணிக்கை 2021 மார்ச் 31-ஆம் தேதி நிலவரப்படி 10 சதவீதம் உயர்ந்து 2.28 கோடியைத் தொட்டிருக்கிறது.
”இந்திய முதலீட்டுச் சந்தை, கோவிட் தொற்றைப் போன்ற புறக்காரணியால் எழுந்த அதிர்ச்சி அலைகளை எதிர்த்து நீச்சல் போட்டு தாக்குப் பிடிக்கின்ற தன்மையைக் காட்டியிருக்கிறது,” என்று சொல்லியிருக்கிறது நிதி அமைச்சகம்.
பரஸ்பர நிதித் தொழிலில் நிர்வகிக்கப்படும் சொத்துக்களின் மதிப்பு (அசெட்ஸ் அண்டர் மேனேஜ்மெண்ட் – ஏயூஎம்) 2020 மார்ச்சில் ரூபாய் 22.26 கோடியாக இருந்து 2021 மார்ச்சில் ரூபாய் 31.43 கோடியாக உயர்ந்திருக்கிறது. இது 41 சதவீத வளர்ச்சி என்று தற்காலத் தரவைச் சுட்டிக்காட்டி நிதி அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.
சிறிய நகரங்களிலும் பரஸ்பர நிதிகள் ஊடுருவி இருக்கின்றன என்பதைப் பின்வரும் தரவுகள் சொல்கின்றன. இந்தியாவில் 30 உச்ச மாநகரங்களில் அசெட்ஸ் அண்டர் மேனேஜ்மெண்ட் 2020 மார்ச்சில் ரூபாய் 3.48 லட்சம் கோடியாக இருந்து 2021 மார்ச்சில் ரூபாய் 5.35 லட்சம் கோடிக்கு மேலே உயர்ந்து 54 சதவீத வளர்ச்சியை அடைந்திருக்கிறது.
இந்த மாநகரங்களில் பதிவான மொத்த அசெட்ஸ் அண்டர் மேனேஜ்மெண்ட் தேசத்தின் ஒட்டுமொத்த பரஸ்பர நிதித் துறையின் அசெட்ஸ் அண்டர் மேனேஜ்மெண்ட்டில் 17 விழுக்காட்டுப் பங்கை வகிக்கின்றது. இந்தத் தொழில்துறையில் பல்வேறு பிரிவுகளின் கீழ் 1,735 பரஸ்பர நிதித் திட்டங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன.
இதையும் படிங்க: வங்கி என்பது வெறும் லாபம் ஈட்டும் தொழிலா?