இந்தியர்களின் தனியுரிமைக்கும் இந்தியாவின் இறையான்மைக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகக் கூறி மத்திய அரசு, டிக்டாக், யூசி பிரவுசர் உள்ளிட்ட 59 சீனச் செயலிகளுக்குத் தடைவிதித்தது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்குப் பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு இன்று நிதியமைச்சகத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில், "இந்தியாவில் பல ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் சீன நிறுவனங்கள் பெரிய முதலீடுகளை மேற்கொண்டுள்ளன. குறிப்பாக முக்கிய நிறுவனங்களான பிளிப்கார்ட், பேடிஎம், ஸ்விக்கி, ஓலா, ஓயோ, சொமேட்டோ, பாலிசி பஜார், பிக் பாஸ்கெட், டெல்லிவரி, மேக்மைட்ரிப், ட்ரீம் 11, ஹைக், ஸ்நாப்டீல், உதான், லென்ஸ்கார்ட்.காம், பைஜஸ், சிட்ரஸ் டெக் உள்ளிட்டவற்றில் சீன நிறுவனங்களின் முதலீடுகள் அதிகமாக உள்ளன.
குறிப்பாக, சீன நிறுவனங்களான அலிபாபா, டென்சென்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் பலவற்றில் முன்னணி முதலீட்டாளர்களாக இருக்கின்றன. எனவே இந்த முதலீடுகளில் எவ்வித முறைகேடுகளும் நடைபெறவில்லை என்பதை நிதியமைச்சகம் உறுதிசெய்ய வேண்டும்" என்று அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் இருக்கும் சீன நிறுவனங்களின் முதலீடுகள்
பேடிஎம்
பிரபல வாலெட் நிறுவனமான பேடிஎம் நிறுவனத்தில் சீனாவின் பெரும் பணக்காரரான ஜாக் மாவுக்கு சொந்தமான அலிபாபா நிறுவனம் 400 மில்லியன் டாலர்கள் முதலீடு செய்துள்ளது.
பிளிப்கார்ட்
சீனாவின் ஸ்டீட்வியூ கேபிடல் (Steadview Capital), டென்சென்ட் ஆகிய நிறுவனங்கள் ஆன்லைன் ஷாப்பிங் தளமான பிளிப்கார்ட்டில் 300 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமாக முதலீடு செய்துள்ளன.
சொமேட்டோ
சொமேட்டோ நிறுவனத்திலும் அலிபாபா நிறுவனம் முதலீடு செய்துள்ளது. இந்நிறுவனத்தைத் தவிர அலிபே சிங்கப்பூர் ஹோல்டிங் பிரைவேட் லிமிடெட் அண்ட் ஃபைனான்சியல் சர்வீசஸ் குரூப், ஷன்வே கேபிடா உள்ளிட்ட சீன நிறுவனங்களும் ஆன்லைன் உணவு விநியோக நிறுவனமான சொமேட்டோவில் முதலீடு செய்துள்ளன. இந்த நிறுவனங்கள் சொமேட்டோவில் 200 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் மேல் முதலீடு செய்துள்ளன.
ஸ்விக்கி
சீனாவின் மீட்டுவான் டயான்பிங் (Meituan Dianping), ஹில்ஹவுஸ் கேபிடல், டென்சென்ட் ஹோல்டிங்ஸ், எஸ்ஏஐஎஃப் பார்ட்னர் (SAIF Partner) ஆகிய நிறுவனங்கள் ஆன்லைன் உணவு விநியோக நிறுவனமான ஸ்விக்கியில் 500 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை முதலீடு செய்துள்ளன.
ஓலா
சீனாவின் டென்சென்ட் ஹோல்டிங்ஸ், ஸ்டெட்வியூ கேபிடல் (Steadview Capital), செய்லிங் கேபிடல் (Sailing Capital), எடர்னல் யீல்ட் இன்டர்நேஷனல் லிமிடெட், சீனா-யூரேசிய பொருளாதார ஒத்துழைப்பு நிதியம் ஆகியவை ஆன்லைன் கார் முன்பதிவு நிறுவனமான ஓலாவில் 500 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்துள்ளன.
பைஜூஸ்
சீனாவின் டென்சென்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனம் ஆன்லைன் கல்வி நிறுவனமான பைஜுஸ் நிறுவனத்தில் 50 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்துள்ளது.
பிக் பாஸ்கெட்
சீனாவின் அலிபாபா குழுமமும் TR Capital நிறுவனமும் ஆன்லைன் மளிகை தளமான பிக் பாஸ்கெட்டில் 250 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்துள்ளன.
ஸ்னாப்டீல்
சீனாவின் அலிபாபா குழுமம் மற்றும் எஃப்ஐஎச் மொபைல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் பிரபல ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான ஸ்னாப்டீலில் 700 மில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளன.
ஓயோ
சீன நிறுவனமான திதி சக்ஸிங் (Didi Chuxing), சீனா லாட்ஜிங் குழுமம் 100 மில்லியன் அமெரிக்க டாலர்களை ஓயோவில் முதலீடு செய்துள்ளன.
இதையும் படிங்க: பேடிஎம் சீன நிறுவனமா? நிறுவனர் விளக்கம்