கோவிட்-19 தேசிய பொருளாதாரத்திற்கு இரண்டு பிரச்சினைகளை உருவாக்கி வைத்திருக்கிறது.
- ஒன்று, வருவாய் வரும்வழியை அடைத்ததனால் உண்டான பொருளாதார இறங்குமுகம்.
- இரண்டு, சமூகத் துறையில் சமூகப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் திட்டங்களுக்குத் தேவைப்படும் அதிக முதலீடு.
இரண்டையும் சரிசமமாகக் கையாளுவது பிரமப் பிரயத்தனமான பணி; அதற்கு வழிகாட்டுவது விவேகமான நிதி நிர்வாக விதிகள். எனினும், மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை ஒரு மைய பாதையைத் தேர்ந்தெடுத்திருக்கிறது.
சுகாதாரத்திற்காகக் குறைவாகச் செலவழிப்பது என்பது இந்தியாவில் என்றும் இருக்கிற பிரச்சினை. என்றாலும், சுகாதார அமைப்புகளில் இருக்கும் சந்துபொந்துகளை அடைத்துச் சரிசெய்வதற்காக காதாரத் துறையில் அதிக பொது முதலீடு செய்வதற்கான தேவையை கோவிட்-19 அதிகப்படுத்தி இருக்கிறது.
வளர்ந்த மாநிலமோ அல்லது வளருகின்ற மாநிலமோ, எல்லா இடங்களிலுமே தொற்றுப்பரவலால் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. காரணம் சுகாதார அமைப்புகள் சரியான தயார் நிலையில் இல்லாமல் இருந்ததுதான்.
நிதிநிலை அறிக்கை 2021-22 மதிப்பீட்டில் நிதியமைச்சர் சுகாதாரம் மற்றும் குடும்பநலன் அமைச்சகத்திற்கும், சுகாதார ஆராய்ச்சிக்கும், ஆயுஷ் அமைச்சகத்திற்கும் மொத்தமாக ரூ.76,901 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளார். இது சென்ற நிதியாண்டு ஒதுக்கீட்டைவிட 11 விழுக்காடு அதிகம்.
கடந்த நான்கு ஆண்டுகளில் இதுவே மிக அதிகமான முதலீடு என்றாலும், ஒட்டுமொத்த அரசு செலவினங்களில் சுகாதாரத்தின் பங்கு கிட்டத்தட்ட மாறாமல் அப்படியேதான் இருக்கிறது; அதாவது நிதிநிலை அறிக்கை 2020-21இல் இருந்ததைப்போல 2.21 விழுக்காட்டிலேயே இருக்கிறது.
உள்பிரிவு ஒதுக்கீடுகளின்படி பார்த்தால் சுகாதாரம் மற்றும் குடும்ப நலன் அமைச்சகத்திற்கு ரூ.71,268 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது; கடந்த நிதிநிலை அறிக்கையைைவிட இது மிதமான 9 சதவிகிதம் அதிகம். ஆயுஷுக்கு ரூ.2,970 கோடியும், சுகாதார ஆராய்ச்சித் துறைக்கு ரூ.2,663 கோடியும் கிடைத்திருக்கிறது.
இந்த நிதியாண்டின் நிதிநிலை அறிக்கையில் ஒட்டுமொத்த அரசு செலவினங்களில் சுகாதாரத்தின் பங்காக இருக்கும் 2.21 விழுக்காடு என்பது சுகாதார நலனுக்கு நிறைய செலவழிக்கும் குடும்பங்களின் சுமையைக் குறைக்காமல் போகலாம்.
சொந்த பணத்திலிருந்து செலவழிக்கும் மக்களின் சுகாதாரச் செலவு 63 விழுக்காட்டில் இருக்கிறது. இது பின்னடைவு மட்டுமல்ல; கோடிக்கணக்கான மக்களை வறுமையின் பிடிக்குள் தள்ளக்கூடியதும்கூட!
பாராட்டுதலுக்கு உரிய அறிவிப்பு
- பிஎம்ஆதம்நிர்பார் ஸ்வஸ்த் பாரத் யோஜனாவும்,
- ஆத்ம நிர்பார் பாரத்தும்.
முன்னேற்றத்தின் ஆறு தூண்களில் ஒன்றான சுகாதாரமும், நலமும் என்ற பிரிவின் கீழ் பிஎம்ஆதம்நிர்பார் ஸ்வஸ்த் பாரத் யோஜனா அறிவிக்கப்பட்டிருக்கிறது. அடிப்படை சுகாதார நலன் கட்டமைப்பைப் பலப்படுத்தவும், பொது சுகாதார நடவடிக்கைகளை மேம்படுத்தவும் பல அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
கிராமப்புற, நகர சுகாதார நலன் மையங்களுக்கு ஆதரவாக ஆறு ஆண்டுகளுக்கு ரூ.64,180 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. பொது சுகாதார பரிசோதனைக் கூடங்கள் அமைக்கப்படும்; விமான நிலையங்களிலும், துறைமுகங்களிலும் பொது சுகாதார மையங்கள் இயங்க ஆரம்பிக்கும்; தேசிய நோய்க் கட்டுப்பாட்டு மையம் பலப்படுத்தப்படும் என்ற அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவிட் பரவல்தொற்று நமக்குக் காட்டியிருக்கிற இருளான நிஜம் இதுதான்: அடிப்படைச் சுகாதார கவனிப்பு, நோய்களை வேவுப்பார்க்கிற அமைப்புகள் மற்றும் பொது சுகாதார வேலைகள் ஆகியவற்றில் நாம் நிறைய செலவு செய்யாவிட்டால், பாதிப்பு படுபயங்கரமாக இருக்கும். இந்தப் பின்னணியில் அரசு அறிவித்திருக்கும் நடவடிக்கைகள் சரியான திசைநோக்கியே இருக்கின்றன.
தொற்று நோய்களின் மீள்தாக்கத்தை அவைக் கட்டுப்படுத்தி சமாளிக்கக் கூடியவை. எனினும், நிதி ஒதுக்கீடு போதாமல் போய்விடலாம்; பல்வேறு திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படுவதால் ஒதுக்கப்பட்ட நிதி கரைந்து சன்னமாகிவிடலாம். கோவிட் தடுப்பூசித் திட்டத்திற்கு மேலும் ரூ.35,000 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. இது நல்லது; அறிவுப்பூர்வமானது.
கணிசமான மக்களுக்குத் தடுப்பூசிப் போட இது உதவும். எவ்வளவு சீக்கிரம் தடுப்பூசி போடுகிறோமோ அவ்வளவு நல்லது பொருளாதாரத்திற்கு. அப்போதுதான் ஏராளமான மக்கள் நோயிலிருந்து விடுபட்டு உற்பத்தி நடவடிக்கைகளில் சுதந்திரமாக ஈடுபட்டு பொருளாதார வளர்ச்சிக்கு தங்கள் பங்கைச் செலுத்த ஆரம்பித்துவிடுவார்கள்.
மேலும், சுகாதாரத்தைத் தீர்மானிக்கும் சமூகக் காரணிகளான ஊட்டச்சத்து, குடிநீர், சுத்தம் காக்கும் திட்டங்கள் ஆகியவைதான் சுகாதாரத்திற்கும், நலனுக்கும் பெரிதும் உதவும் என்பதால், அவற்றிற்கு இந்த நிதிநிலை அறிக்கை கணிசமாகவே நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறது. குடிநீர், சுத்தம் ஆகியவற்றிற்கான மொத்த ஒதுக்கீடு உயர்ந்திருக்கிறது. கடந்த நிதிநிலை அறிக்கை ஒதுக்கீடுசெய்த ரூ.21,518 கோடியிலிருந்து இந்த நிதிநிலை அறிக்கையில் அது ரூ.60,030 கோடியாக உயர்ந்திருக்கிறது. இது மூன்று மடங்கு அதிகம்.
ஊட்டச்சத்து
மாறாக, கடந்த ஆண்டு பட்ஜெட் மதிப்பீட்டோடு ஒப்பிடுகையில், இந்த ஆண்டு ஊட்டச்சத்திற்கான நிதி ஒதுக்கீடு குறைவாக இருக்கிறது. தேசிய குடும்ப சுகாதார ஆய்வு-5 (என்எஃப்ஹெச்எஸ் – 5) வெளியிட்ட தரவுகளின் படியான ஊட்டச்சத்து குறிப்பான்களை நோக்கிய இந்தியாவின் முன்னேற்றத்தை இடம், சூழல் ஆகியவற்றின்படி விவரமாக்கப்பட வேண்டும்.
குறிப்பாக, வயதுக்கேற்ற உயரம், சேதாரம் ஆகிய அளவுகோல்களின்படி, செழிப்பான மாநிலங்களில் பெரும்பாலானவற்றில் உயரத்திற்கேற்ற பருமன் வீழ்ச்சியடைந்திருக்கிறது; ஏன் இப்படி; என்ன தவறு நிகழ்ந்திருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளும்போது புதிராக இருக்கிறது.
இந்த நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட ஊட்டச்சத்து இயக்கம் (மிஷன் போஷன்) 2.0 ஊட்டச்சத்துத் துறைக்கு பெரியதோர் ஊக்கமாக இருக்கலாம். என்றாலும் இதைப் பற்றி இப்போது பேசுவது முந்திரிக்கொட்டைத்தனமாகிவிடும்.
மேலும், சுகாதாரத்திற்கும், நலனுக்கும் ஒதுக்கப்பட்ட நிதியின் விநியோகப் பகிர்வு எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்திருக்கிறது; அதன்படி பார்த்தால், நிதிக் குழுவின் ஒதுக்கீட்டையும் சேர்த்து சுகாதாரத்திற்கு சுமார் 40 விழுக்காடு கிடைத்திருக்கிறது.
குடிநீர், தூய்மைப் பேணுதல் ஆகியவற்றிற்கான பங்கு பெரிதாக இருக்கிறது; அதாவது, 43 விழுக்காடு. சுகாதாரத்திற்கும், நலனுக்கும் ஒதுக்கிய நிதியில் 137 விழுக்காடு ஏற்றம் மிகப்பெரிய உயர்வு என்று கருதப்படுகிறது. ஆனால் இந்த நிதி சுகாதாரத்திற்கும் மட்டுமானது அல்ல; அது சுகாதாரத்தைத் தீர்மானிக்கும் மற்ற காரணிகளுக்கும் சேர்த்துத்தான்.
சுகாதாரம் முக்கியமான சமூகத் தூண்களில் ஒன்று. சுகாதாரக் கவனிப்புச் சவால்கள் பல்வேறானவை என்பதால், இந்த விஷயத்திற்குக் கொடுக்க வேண்டிய முன்னுரிமைகள் இடம் பெயர்ந்துவிடக் கூடாது. 2018இல் அறிவிக்கப்பட்ட பிஎம்ஜேஏஒய் (பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா) சுகாதாரத்தை அரசியல் சொல்லாடலின் மையத்திற்குக் கொண்டுவந்தது. 2020ஆம் ஆண்டில் சுகாதாரம் மீண்டும் செல்வாக்குப் பெற்றது, ஒரு தவறான காரணத்திற்காக (கோவிட்-19) இந்த வேகத்தை நிறுத்திவிடக் கூடாது.
பொதுநிதி ஒதுக்கீட்டை இன்னும் அதிகப்படுத்த வேண்டும். அப்போதுதான் பொருளாதார ஆய்வில் (எகனாமிக் சர்வேயில்) சொல்லப்பட்டிருப்பதுபோல, சுகாதாரத்திற்கான பொதுநிதிச் செலவழிப்பு என்பது உள்நாட்டு மொத்த உற்பத்தியில் (ஜிடிபி) 2.5 முதல் 3 விழுக்காட்டை அடைய வேண்டும் என்ற இலக்கு நிறைவேறும்.
உலகத்தில் முன்னேறிய, முன்னேறிக் கொண்டிருக்கும் நாடுகளோடு ஒப்பிடுகையில் இந்தியா சுகாதாரத்திற்குக் குறைவாகச் செலவழிக்கும் நாடு என்ற கெட்ட பெயர் நீக்கப்பட வேண்டும். ஏனென்றால் நாட்டின் பலவீனமான பொது சுகாதார அமைப்புக்கு இதுவும் ஒரு காரணம்.
(கட்டுரை ஆசிரியர் புவனேஸ்வரில் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் பப்ளிக்கில் கூடுதல் பேராசியராகப் பணிபுரிபவர். இந்தக் கட்டுரையில் சொல்லப்பட்ட கருத்துகள் அவருடைய சொந்தக் கருத்துகள். அவர் பணிபுரியும் நிறுவனத்தின் கருத்துகள் அல்ல. தொடர்புக்கு sarit.kumar@phfi.org)