அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனை தலைமையிடமாகக் கொண்டு ஐ.எம்.எஃப் எனப்படும் சர்வதேச நிதி முனையம் செயல்பட்டுவருகிறது. இதன் தலைவராகப் பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டைன் லகார்டே என்பவர் பணியாற்றி வருகிறார். இவரின் பதவிக்காலம் வரும் அக்டோபர் 1ஆம் தேதியுடன் நிறைவடையும் நிலையில், புதிய தலைவராக கிரிஸ்டாலினா ஜார்ஜிவா இன்று தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
உலக வங்கியின் தலைமை செயல் அலுவலராகவும், தலைவராகவும் பணியாற்றியுள்ள கிரிஸ்டாலினா பொருளாதார அறிவியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கிரிஸ்டாலினா, ஐ.எம்.எஃப் வழங்கியுள்ள இந்த பொறுப்பு எனக்கு பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. இதை பெரும் கௌரவமாகக் கருதுகிறேன். இதுவரை தலைவராகச் சிறப்பாக பணியாற்றிய கிறிஸ்டைன் லகார்டேவுக்கு எனது பாராட்டுக்களை உரித்தாக்குகிறேன் என்றுள்ளார்.
1945ஆம் ஆண்டு, இரண்டாம் உலகப்போருக்குப்பின் தொடங்கப்பட்ட ஐ.எம்.எஃப் அமைப்பு சர்வதேச நிதி ஸ்திரத்தன்மை, சர்வதேச வணிகம், வறுமை குறைப்பு ஆகிய நடவடிக்கைகளுக்காக உருவாக்கப்பட்டது.