பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல்-இன் நிர்வாக இயக்குனர் பி.கே. புர்வாருக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம் நடத்த அனைத்து ஊழியர்கள் மற்றும் கூட்டமைப்பு சங்கத்தினர் திட்டமிட்டுள்ளனர். பிஎஸ்என்எல் நிறுவனத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள அதன் நிர்வாக இயக்குனர் தவறிவிட்டார் எனக் குற்றஞ்சாட்டி இந்தப் போராட்டத்தை சங்கத்தினர் முன்னெடுத்துள்ளனர்.
இதற்கான சமூக வலைதளத்தில் அக்டோபர் ஆறாம் தேதி முதல் தொடங்கும் எனத் தொழிற்சங்க அமைப்பு கூறியுள்ளது. இந்த போராட்டம் தொடர்பாக சங்கம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், 'அக்டோபர் 26ஆம் தேதி அன்று கருப்பு பேட்ச் அணிந்து, கருப்புக் கொடி போராட்டம் நடத்த ஊழியர்கள் முன்வர வேண்டும்.
நிர்வாக இயக்குனர் பி.கே புர்வாரை நீக்க வேண்டும் என்பதே பிரதானக் கோரிக்கை. நிறுவனத்தின் ஒட்டுமொத்த தோல்விக்கு அவர்தான் பொறுப்பு. 2019ஆம் ஆண்டு அரசு சிறப்பு நிதிச்சலுகை திட்டத்தை செயல்படுத்திய பின்னும் நிர்வாகம் மோசமாகச் செயல்படுகிறது. ஊழியர்களுக்கான சம்பள பாக்கி பிரச்னையை தீர்த்து வைப்பதில் கூட அவர் கவனம் செலுத்தவில்லை' எனப் புகார் தெரிவித்துள்ளது.
2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பிஎஸ்என்எல் நிறுவனத்தை மீட்டெடுக்க ரூ.69,000 கோடி அரசு சார்பில் ஒதுக்கப்பட்டது. இந்நிலையில், நிறுவனத்தின் இழப்பானது ரூ.15,500 கோடியிலிருந்து ரூ.7,441 கோடியாக குறைந்துள்ளது. அதேவேளை, நிறுவனத்தின் மொத்தக் கடன் ரூ.30,000 கோடியாக உள்ளது.
இதையும் படிங்க: பண்டோரா பேப்பர்ஸ் - விசாரணை நடத்த வருமான வரித்துறை முடிவு