நாட்டில் நிலவும் பொருளாதார மந்தநிலையால் வாகன விற்பனை கடந்த சில மாதங்களாக சரிவைச் சந்தித்துள்ளது. அதிலும் குறிப்பாக சரக்கு வாகனங்களின் விற்பனை என்பது படுமோசமான நிலையில் உள்ளதால் அதன் தயாரிப்பு நிறுவனங்கள் உற்பத்தி செலவைக் குறைக்கும் நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளன. அதன்படி பல நிறுவனங்கள் தங்களின் தொழிற்சாலைகளில் உற்பத்தியை நிறுத்தியும் உள்ளன.
அந்த வகையில் தற்போது சென்னையை தலைமையிடமாகக்கொண்டு செயல்படும் நாட்டின் முன்னணி சரக்கு வாகன விற்பனை நிறுவனமான அசோக் லேலாண்ட், தங்களது உற்பத்தியை குறைக்கும் வகையில், டிசம்பர் மாதத்தில் தங்களது சில தொழிற்சாலைகளில் 2 முதல் 12 நாட்கள் வரை வேலை இல்லாத நாட்களாக அறிவித்துள்ளது. இருப்பினும் அவை எந்தெந்த தொழிற்சாலைகள் என குறிப்பிடப்படவில்லை. பங்குச் சந்தைகளுக்கு அளிக்கப்பட்டுள்ள தகவலில் அசோக் லேலாண்ட் இதனைத் தெரிவித்துள்ளது. சந்தையில் தேவை குறைவுகேற்ப இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
வாகன விற்பனை சரிவு காரணமாக அசோக் லேலண்ட் நிறுவனம் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து வேலையில்லாத நாட்களை அறிவித்துவருகிறது. ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான அரையாண்டில் நாட்டின் சரக்கு வாகன விற்பனை 22 சதவீதம் வரை குறைந்துள்ளதாக சியாம் எனப்படும் இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. நடப்பு நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டில் அசோக் லேலாண்ட் நிறுவனத்தின் லாபம் 92 சதவீதம் வரை சரிவடைந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.