இந்திய ஆட்டோமொபைல் துறையில் மிகப்பெரிய நிறுவனமாகத் திகழ்வது மாருதி சுசூகி. இந்திய வாகன உற்பத்திச் சந்தையில் சுமார் 50 விழுக்காட்டிற்கு மேலான உற்பத்தி, மாருதி சுசூகி நிறுவனத்திடமே உள்ளது.
இந்நிலையில், தொடர்ந்து 16ஆவது ஆண்டாக இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார் மாடலாக ’ஆல்டோ’ இருப்பதாக மாருதி சுசூகி நிறுவனம் அறிவித்துள்ளது. 2019-20ஆம் ஆண்டில் மட்டும் 1.48 லட்சம் ஆல்டோ கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மாருதி சுசூகி நிறுவனம் 2000ஆம் ஆண்டு ஆல்டோ மாடலை அறிமுகப்படுத்தியது. 2004ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார் மாடலாக ஆல்டோ திகழ்கிறது.
இதுகுறித்து மாருதி சுசூகி நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை பிரிவின் நிர்வாக இயக்குநர் சஷாங்க் ஸ்ரீவஸ்தவா கூறுகையில், "பொதுமக்களிடையே ஆல்டோ மாடலுக்கு உள்ள வரவேற்பே, நாங்கள் சரியான நேரத்தில் காருக்குத் தேவையான மேம்படுத்தல்களை வழங்குகிறோம் என்பதற்குச் சான்று. வாடிக்கையாளர்களின் விருப்பங்களை உன்னிப்பாகக் கவனித்து, அதற்கேற்ற வகையில் கார்களில் தேவையான மாற்றங்களை நாங்கள் ஏற்படுத்திவருகிறோம்” என்றார்.
இதையும் படிங்க: ஜிஎஸ்டி வரம்பிற்குள் பெட்ரோல், டீசல் விலை - காங்கிரஸ் வலியுறுத்தல்