கோவிட்-19 வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல நாடுகள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. இதனால் உலகெங்குமுள்ள விமான நிறுவனங்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவிலும் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இந்தியாவிலுள்ள அனைத்து விமான நிறுவனங்களும் மார்ச் இறுதி வாரத்தில் தங்கள் சேவையை நிறுத்திக்கொண்டன.
சேவையைத் தொடர முடியாததால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியைச் சமாளிக்க பல விமான நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களுக்குக் கட்டாய விடுப்பு அளிக்கின்றனர். சில நிறுவனங்கள் சம்பள குறைப்பு செய்கின்றனர்.
அதன்படி பெங்களூருவைத் தலைமையிடமாகக்கொண்டு செயல்படும் ஏர்ஏசியா நிறுவனமும் தனது ஊழியர்களின் சம்பளத்தில் 20 விழுக்காடு வரை குறைக்க முடிவு செய்துள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அந்நிறுவனத்தைச் சேர்ந்த உயர் அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
"ஏர்ஏசியா ஊழியர்களின் ஏப்ரல் மாத ஊதியத்தில் 20 விழுக்காடு வரை பிடித்தம் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி மூத்த அலுவலர்களின் ஊதியம் 20 விழுக்காடு வரை பிடித்தம் செய்யப்படுகிறது. அதேபோல மற்ற நிர்வாகிகளின் ஊதியமும் முறையே 17, 13 , 7 விழுக்காடு வரை பிடித்தம் செய்யப்படும்" என்று அவர் தெரிவித்தார்.
ரூ. 50 ஆயிரத்திற்கும் குறைவான ஊதியம் பெறுபவர்களுக்கு இந்த சம்பள குறைப்பிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இருப்பினும் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏர்ஏசியா சார்பில் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இதையும் படிங்க: கரோனா காலத்தில் வெளியான ஒன்பிளஸ் மொபைல்!