இந்தியாவில் கோவிட்-19 பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் அனைத்து ஆன்லைன் ஷாப்பிங் தளங்களும் மார்ச் இறுதி வாரத்தில் தங்கள் சேவைகளை நிறுத்திக் கொண்டன. ஊரடங்கு காலத்தில் அத்தியாவசியப் பொருள்களை விற்பனை செய்ய மட்டுமே ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டது.
தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் சூழலில், ஆன்லைன் ஷாப்பிங் தளங்களும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தங்கள் சேவைகளை தொடங்கி விட்டன. இந்நிலையில், இந்தியாவின் மிக முக்கிய ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் ஒன்றான ஃப்ளிப்கார்ட், ஏப்ரல், மே மாதங்களில் தனது சேவையில் புதிய சிறு, குறு உற்பத்தியாளர்கள் இணைவது என்பது 125 விழுக்காடு வரை அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இது குறித்து ஃபிளிப்கார்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தத் தொற்று பரவல், நாட்டிலுள்ள வணிகர்கள் தங்கள் தொழில் முறை குறித்து மீண்டும் பரிசீலனை செய்ய உதவும் ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது. நாடு முழுவதும் உள்ள சிறு, குறு உற்பத்தியாளர்கள் ஆன்லைன் வர்த்தகத்தின் உண்மையான மதிப்பை தற்போது உணர்ந்துள்ளனர்.
குறிப்பாக உத்தரப் பிரதேசம், மாகாராஷ்டிரா, மேற்கு வங்கம், டெல்லி, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் இருக்கும் சிறு, குறு உற்பத்தியாளர்கள் எங்கள் தளத்தில் அதிக அளவில் இணைகிறார்கள்.
இந்த நெருக்கடியான காலத்தில் சிறு, குறு உற்பத்தியாளர்களுக்கு உதவும் வகையில் ஃபிளிப்கார்ட் இணையதளம் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு வெறும் 369 ரூபாய் ப்ரீமியம் கட்டணத்தில், சிறு, குறு உற்பத்தியாளர்கள், தங்கள் குடும்பத்தினருக்கு 50 ரூபாய் முதல் மூன்று லட்ச ரூபாய் வரையிலான காப்பீட்டை செய்து கொள்ளலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மீண்டும் வர்த்தகம் தொடங்கப்பட்ட ஏப்ரல் மாதம் முதல், ஃபிளிப்கார்ட்டில் 90 விழுக்காடு விற்பனையாளர்கள் வர்த்தகத்தை மீண்டும் தொடங்கி விட்டனர் என்றும் அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கோவிட்-19 சிகிச்சைக்கு டெக்ஸாமெதாசோன் மருந்தை சேர்த்தது மத்திய சுகாதாரத் துறை!