நிதித் துறையில் நிர்மலாவின் என்ட்ரி
நாட்டின் முதல் முழு நேர பெண் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது முதல் மத்திய பட்ஜெட்டை (நிதிநிலை அறிக்கை) தாக்கல் செய்தார். 'ஐந்து லட்சம் கோடி டாலர் பொருளாதாரமாக இந்தியாவை 2024ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை உயர்த்துவோம்' என்ற லட்சியத்துடன் இந்த நிதிநிலை அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.
![பட்ஜெட் கோப்புடன் நிர்மாலா சீதாராமன்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/5547840_klgfk.jpg)
பெருநிறுவனங்களுக்கு அடித்த லாட்டரி
நாட்டின் பொருளாதார மந்தநிலையை போக்கும்விதமாக தொழில்முதலீட்டை அதிகரிக்க பெருநிறுவனங்களுக்கான வரி கணிசமாக நீக்கப்பட்டது. பெருநிறுவனங்களுக்கான வரி 30 விழுக்காட்டிலிருந்து 22 விழுக்காடாக குறைக்கப்பட்டது.
![கார்பரேட் வரி குறைப்பு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/5547840_klgkgldfg.jpg)
வேரூன்றிய வேலையின்மை சிக்கல்
நாட்டின் வேலையில்லாத் திண்டாட்டம் 45 ஆண்டுகளில் இல்லாதளவிற்கு அதிகமாக உள்ளது என என்.எஸ்.எஸ்.ஓ. புள்ளிவிவரம் தெரிவித்துள்ளது. 2017-18ஆம் ஆண்டு புள்ளிவிவரத்தின்படி நாட்டின் வேலையில்லாத் திண்டாட்டம் 6.1 விழுக்காடாக உச்சத்தை தொட்டுள்ளது.
கூகுளை வசப்படுத்திய சுந்தர் பிச்சை
கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்ஃபபெட் நிறுவனத்தின் தலைவராக சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டுள்ளார். கூகுள் நிறுவனர்களான லாரி பேஜ், செர்ஜே பின் ஆகியோர் பதவி விலகியதையடுத்து சுந்தர் பிச்சை இப்பொறுப்பை ஏற்றுள்ளார். இதன்மூலம் உலகின் சக்திவாய்ந்த பெருநிறுவனத்தின் ஒட்டுமொத்த தலைவராக தமிழர் ஒருவர் உருவெடுத்துள்ளார்.
வெளிச்சத்துக்கு வந்த டி.எச்.எஃப்.எல். பூதம்
திவான் ஹவுசிங் பைனான்ஸ் லிமிடெட் என்ற வங்கிசாரா கடன் வழங்கும் நிறுவனம் போலி நிறுவனங்களுக்கு சுமார் 31 ஆயிரம் கோடி ரூபாய் கடன்தொகையை ஒதுக்கியுள்ளது தெரியவந்துள்ளது. இவ்விவகாரத்தை கோப்ரா போஸ்ட் இணையதளம் புலனாய்வு விசாரணையில் வெளிக்கொண்டுவந்து நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
ஆட்டம் கண்ட பொருளாதாரம்
நாட்டின் பொருளாதாரம் 2019ஆம் ஆண்டில் கடும் சரிவைச் சந்தித்துள்ளது. 2018ஆம் ஆண்டு தொடக்கத்தில் 8 விழுக்காடாக இருந்த வளர்ச்சி 4.5 விழுக்காடாக குறைந்துள்ளது. குறிப்பாக ஆட்டோமொபைல் நிறுவனங்கள் பொருளாதார சரிவால் பெரும் பாதிப்புக்குள்ளாகின.
![சரிந்த வளர்ச்சி விகிதம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/5547840_jkgjfg.jpg)
உச்சம் தொட்ட வெங்காய விலை
இந்தாண்டு நடுத்தர, பாமர மக்களை திக்குமுக்காடச் செய்யும் அளவிற்கு வெங்காய விலை உச்சம் தொட்டது. ஒரு கட்டத்தில் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை 200 ரூபாய் அளவிற்கு உச்சம்தொட, விலையை குறைக்கும் நடவடிக்கையாக வெளிநாடுகளிலிருந்து டன் கணக்கில் வெங்காயம் இறக்குமதி செய்யும் சூழல் ஏற்பட்டது.
![உச்சம் தொட்ட வெங்காய விலை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/5547840_klgkfgk.jpg)
தொடர் வட்டிக்குறைப்பு செய்த ரிசர்வ் வங்கி
நாட்டின் பொருளாதார செயல்பாட்டை ஊக்குவிக்கும்விதமாக ரிசர்வ் வங்கி தொடர் வட்டிக்குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 1.35 விழுக்காடு வட்டிக்குறைப்பை ரிசர்வ் வங்கி மேற்கண்டது. ரிசர்வ் வங்கி ஆளுநர் தலைமையிலான நிதிக் கொள்கை ஆய்வுக் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது.
அந்நிய நேரடி முதலீட்டுக்கு செக்
இந்தியாவின் சிறு, குறு வணிகத்தில் அந்நிய நேரடி முதலீட்டுக்கான விதிமுறைகளில் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. அமேசான், வால்மார்ட் நிறுவனங்கள் இந்தியாவில் சில்லறை வர்த்தகத்தில் காலூன்ற அந்நிய நேரடி முதலீடு வழிவகுக்கும் என்பதால், சிறுவணிகர்கள் பெரும் எதிர்ப்பை தெரிவித்தனர். இதையடுத்து பெருநிறுவனங்கள், தங்கள் வாடிக்கையாளர்களுக்கு தள்ளுபடி வழங்குவதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
சரிந்த ஜெட் ஏர்வேஸ் சாம்ராஜியம்
முடங்கியது ஜெட் ஏர்வேஸ் - 25 ஆண்டுகளுக்குமுன் நரேஷ் கோயலால் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக இயங்கிவந்த ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கடன் சிக்கல் காரணமாக முடங்கியது. பங்குதாரர்கள், முதலீட்டாளர்கள் நிறுவனத்தை மறுகட்டமைக்க நிதி வழங்க மறுப்பு தெரிவிக்கவே ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தற்காலிக முடக்கத்தில் உள்ளது.
![பி.எம்.சி வங்கி ஊழல்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/5547840_gmgmg.jpg)
விமானநிலையங்களை வளைத்துப்போட்ட அதானி
அதானி குழுமத்துக்கு ஆறு ஏர்போர்ட் - இந்தியாவின் முன்னணி தொழில்நிறுவனமான அதானி குழுமத்துக்கு அகமதாபாத், லக்னோ, ஜெய்பூர், கவுஹாத்தி, திருவனந்தபுரம், மங்களூரு ஆகிய விமானநிலையங்களை இயக்குவதற்கான உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
இண்டிகோ ஏர்லைன்சிலும் குழப்பம்
இந்தியாவின் முன்னணி விமான போக்குவரத்து நிறுவனமான இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கு இடையே மோதல்போக்கு நிலவிவருகிறது. பங்குதாரர்களான ராகுல் பாட்டியா, ராகேஷ் கங்க்வால் ஆகியோருக்கு இடையே மோதல் நிலவ செபி எனப்படும் இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் இதில் தலையிட்டு ஒருங்கிணைப்பை கொண்டுவர முயலுகிறது.
கையெழுத்தான முக்கிய எரிபொருள் ஒப்பந்தம்
ரிலையன்ஸ் - சவுதி அரம்கோ ஒப்பந்தம்: இந்தியாவின் முன்னணி தொழில்நிறுவனமான ரிலையன்ஸ் நிறுவனம் சவுதி அரேபியாவைச் சேர்ந்த அரம்கோ நிறுவனத்துடன் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான எரிசக்தி ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
வாடிக்கையாளர்களை வதைத்த பி.எம்.சி. வங்கி ஊழல்
பொதுத் துறை வங்கியான பஞ்சாப் மகாராஷ்டிரா வங்கி சுமார் ஆறாயிரத்து 700 கோடி ரூபாய் தொகையை முறைகேடாக கடன் வழங்கிய அதிர்ச்சித் தகவல் விசாரணையில் தெரியவந்துள்ளது. கடன் வாங்கிய எச்.டி.ஐ.எல். நிறுவனம் திவாலாகவே, அந்நிறுவனத்தின் உரிமையாளர் ராகேஷ் வதாவன், வங்கியின் முன்னாள் நிர்வாக இயக்குநர் ஜாய் தாமஸ் ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர்.
சைரஸ் மிஸ்திரிக்கு சாதகத் தீர்ப்பு
டாடா குழுமத்தின் தலைவர் பதவியிலிருந்து சைரஸ் மிஸ்திரி நீக்கப்பட்டது செல்லாது என்று தேசிய கம்பெனிகள் சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், டாடா குழுமத் தலைவராக என். சந்திரசேகரன் நியமிக்கப்பட்டது செல்லாது என்றும் அது உத்தரவிட்டுள்ளது.
மூன்றாண்டுகளுக்கு முன் சைரஸ் மிஸ்திரியிடமிருந்து பதவி பறிக்கப்பட்ட நிலையில், தேசிய கம்பெனிகள் சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தை அவர் நாடினார். இந்த வழக்கில் மிஸ்திரியின் நீக்கம் செல்லாது எனத் தீர்பளித்துள்ளது. இந்த வழக்கில் டாடா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பங்குச்சந்தையில் தடம்பதித்த ஐ.ஆர்.சி.டி.சி.
லாபகரமாக இயங்கிவரும் ரயில் சேவை நிறுவனமான ஐ.ஆர்.சி.டி.சி. இந்தாண்டு பங்குச்சந்தையில் வெற்றிகரமாக களமிறங்கியுள்ளது. மினி ரத்னா நிறுவனமான ஐ.ஆர்.சி.டி.சி. பங்குச்சந்தையில் களமிறங்கிய முதல் நாளிலேயே அடிப்படை தொகையைக் காட்டிலும் இருமடங்கு அதிகமாக விற்பனையாகி அசத்தியது.
ஆர்.சி.இ.பி ஒப்பந்தத்துக்கு நோ சொன்ன இந்தியா
சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுடன் இணைந்து செயல்படும் ஆர்.சி.இ.பி. ஒப்பந்தம் மேற்கொள்ள இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது. நாட்டின் வணிகர்களின் நலன்கருதி இம்முடிவை மேற்கொண்டதாக மத்திய அரசு தெரிவித்தது.
முகேஷ் அம்பானி காட்டுல வழக்கம்போல மழைதான்
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 10 லட்சம் கோடி ரூபாயை எட்டி சாதனை படைத்தது. நாட்டின் அதிக வருவாய் ஈட்டிய நிறுவனமாகவும் இந்தியன் ஆயில் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி ரிலையன்ஸ் முதலிடம் பிடித்துள்ளது.
அலிபாபாவுக்கு ஜாக் மா டாடா
சர்வதேச பெருநிறுவனங்களில் ஒன்றான அலிபாபாவின் தலைமைப் பொறுப்பிலிருந்து ஜாக் மா ஒய்வுபெற்றுள்ளார். சீனாவைச் சேர்ந்த ஜாக் மா எஞ்சிய காலத்தை ஆசிரியராகப் பணியாற்றி கழிக்கவிரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
மீண்டும் நம்பர் 1ஆன பில்கேட்ஸ்
மென்பொருள் நிறுவனத்தின் நிறுவனர் பில்கேட்ஸ் கடந்த நவம்பர் மாதம் உலகின் பணக்காரர் பட்டியலில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்தார். நீண்டகாலம் முதலிடத்திலிருந்த அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெஃப் பெசாசை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தை மீண்டும் கைப்பற்றினர் பில்கேட்ஸ்.