கோவை: ஆடு வளர்ப்பு மற்றும் கொப்பறை தேங்காய் திட்டத்தின் கீழ் ரூ.1.38 கோடி மோசடி செய்த இளைஞருக்கு 10 ஆண்டு சிறை, 45 லட்சம் அபராதம் விதித்து கோவை டான்பிட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம், கோபியில் கடந்த 2012 ஆம் ஆண்டு "அசோக் பார்ம்ஸ் அண்ட் கோப்ராஸ் பிரைவேட் லிமிட்" என்ற நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்நிறுவனம், ஒரு லட்சம் ரூபாய் வழங்கினால் ஆட்டு குட்டி வழங்கி, அதை வளர்க்க மாதம் பராமரிப்பு தொகை வழங்குவதாகவும், 50 ஆயிரம் கொடுத்தால் தேங்காய்கள் வழங்குவதாகவும், அதிலிருந்து கொப்பறை தேங்காய் எடுத்து கொடுத்தால் அதற்கான வட்டியும் தருவதாக விளம்பரம் செய்து, 89 முதலீட்டாளர்களிடமிருந்து 1 கோடியே 38 லட்சத்து 25 ஆயிரத்து 500 ரூபாய் பெற்று மோசடி செய்ததாக, ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில், மோசடி செய்த நிறுவன உரிமையாளர் ராஜேஷுக்கு (30), பத்து ஆண்டுகள் சிறை தண்டனையும், 45 லட்சம் அபராதம் விதித்தும் கோவை தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நல சிறப்பு நீதிமன்றம் (டான்பிட்) உத்தரவிட்டுள்ளது.