கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் பார்வதிபுரம் பகுதியைச் சேர்ந்த 17 வயதான சிறுமி, கடந்த ஏப்ரல் மாதம் மாயமானார். இது குறித்து நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர்.
அதன் பேரில் காவல் துறையினர் விசாரணை நடத்தியதில், தோவாளை பகுதியைச் சேர்ந்த பூ வியாபாரி நிலேஷ் குமார் (வயது 20) என்பவர் சிறுமியை கடத்திச் சென்றது தெரியவந்தது. சிறுமி மைனர் என்பதால் கடத்தல் வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் தேடி வந்த நிலையில், அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில் நிலேஷ் குமாரும், சிறுமியும் திண்டுக்கல்லில் இருந்ததை பார்த்த உறவினர்கள், இருவரையும் அழைத்து வந்தனர். இதற்கிடையில், சிறுமிக்கு 18 வயது நிரம்பிவிட்டதால் இரு குடும்பத்தினரின் சம்மதத்துடன் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து, புதுமண தம்பதிகள் கணவனின் வீடான தோவாளை பகுதிக்கு நேற்று முன்தினம் (செப்டம்பர் 7) சென்றனர். இந்த தகவல் அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு தெரியவந்தது.
இதையடுத்து இளைஞரையும், பெண்ணையும் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு காவலர்கள் அழைத்து வந்தனர். அப்போது, தம்பதியின் உறவினர்கள் நடவடிக்கை எதுவும் வேண்டாம் எனக் கூறினார். ஆனால், இளம்பெண் மாயமானபோது மைனராக இருந்ததால், நிலேஷ் குமார் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். எனவே நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளித்து வழக்கை முடித்துக் கொள்ளுமாறு காவல்துறையினர் தெரிவித்தனர்.