ஈரோடு மாவட்டம் லாரி டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் பணியாற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு , பணி பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
இது குறித்து அம்மனுவில் கூறியிருப்பதாவது, "ஈரோடு நகரில் லாரி வர்த்தக நிறுவனங்கள், எண்ணெய் ஆலைகள், மஞ்சள் மண்டிகள், காய்கறி சந்தைகள், ஜவுளி நிறுவனங்கள் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு வாகனங்களில் வரும் சரக்குகளை இறக்கும் பணிகளையும் வெளி மாநில, மாவட்டங்களுக்கு சரக்குகளை ஏற்றும் பணிகளையும் சுமார் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர்.
இவர்கள் தங்களது தொழிற்சங்கங்கள் மூலம் வர்த்தக நிறுவன உரிமையாளர்கள், பொறுப்பாளர்களுடன் இரண்டு அல்லது மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை சுமுக முறையில் பேச்சுவார்த்தை நடத்தி கூலிக்கான ஒப்பந்தம் போட்டு கூலி பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன் லாரி நிறுவனங்களில் பணியும் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு 41% கூலி உயர்வு பேசி முடிக்கப்பட்டு கூலி வாங்கிவந்தனர். இச்சூழலில் ஒப்பந்த காலம் முடிந்து ஒன்றரை ஆண்டுகள் ஆன நிலையில் கூலி உயர்வு கேட்டு கூட்ஸ் டிரான்ஸ்போர்ட் நிர்வாகத்திடம் நேரிலும் தபால் மூலமும் கோரிக்கை வைத்தும் அவர்கள் காலம் தாழ்த்தி வருகின்றனர்.
இதனைக் கண்டித்து ஏற்கனவே பேரணி நடத்தப்பட்டும் மாவட்ட ஆட்சியரிடம் மனுவும் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் பலதரப்பட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு கூலி உயர்வு தர வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது கரோனா பாதிப்பால் தங்களது சுமை தூக்கும் தொழிலாளர்கள் வேலையின்றி மூன்று மாதங்களாக வறுமையில் வாடிவருகின்றனர்.
கடந்த 10 நாள்களாக ஒருசில லாரி நிறுவனங்கள் செயல்பட தொடங்கியுள்ளன. ஆனால் லாரி நிறுவனங்கள் எங்களை பழிவாங்கும் நோக்குடன் கூலியை குறைத்து தருகின்றனர். இதுகுறித்து கேட்டால் தகாத வார்த்தை கூறி அங்குள்ள பெண் அலுவலர் மிரட்டுகிறார்.
எனவே லாரி நிறுவனங்களில் சுமை தூக்கும் பணி செய்யும் தொழிலாளர்களுக்கு நியாயமான கூலி உயர்வு கிடைக்கவும் தொழிலாளர்களின் தொழிலுக்கும் வாழ்வுக்கும் பாதுகாப்பு கிடைக்க கூட்ஸ் டிரான்ஸ்போர்ட் நிர்வாகத்தை வலியுறுத்த வேண்டும்" இவ்வாறு அம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.