நாகப்பட்டினம் மாவட்டம், இறையான்குடி ஊராட்சிக்கு உள்பட்ட சிங்கமங்கலம் கிராமத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இந்நிலையில் அப்பகுதி மக்கள், அடிப்படைத் தேவைகளான சாலை, குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட எவ்வித வசதிகளும் இல்லாததால் நாள்தோறும் கடும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். இதனால், மனமுடைந்த அப்பகுதி பெண்கள் தகுந்த இடைவெளியுடன் காலி குடங்களை கையில் ஏந்தி கவன ஈர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து அவர்கள் கூறுகையில், "தற்போது, கோடைகாலம் என்பதால் எங்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் போதிய நீர் ஆதாரங்கள் ஏதும் இல்லை. இப்பகுதியிலுள்ள ஒரே ஒரு, அடி பம்பை மட்டும் நம்பியே எங்களது குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகிறோம்.
இங்கு நிலத்தடி நீர்மட்டம் மிகவும் குறைவாக இருக்கிறது. அதனால், அடி பம்பில் சரிவர தண்ணீர் வராமல் சிறிது சிறிதாக தண்ணீர் கொட்டுவதால் ஒரு குடம் தண்ணீரை நிரப்ப நீண்ட நேரம் போராட வேண்டியுள்ளது.
இப்பகுதியில் உள்ள சுமார் ஐந்துக்கும் மேற்பட்ட குளங்களை சீரமைத்து மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீர் இப்பகுதிக்கு வந்து சேர்வதற்கு வழிவகை செய்யவேண்டும்.
அதேபோல், கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் தண்ணீர் வழங்க வேண்டும். கிராமத்தின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு செய்து தர வேண்டும்" என வேதனையுடன் தெரிவித்தனர்.