தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள கன்னிசேர்வைபட்டி கிராமத்தை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவரது மகன் பிரபு (வயது 35). திராட்சை விவசாயம் செய்து வரும் இவருக்கு, ஆனைமலையன்பட்டியைச் சேர்ந்த பவித்ரா (வயது 23) என்ற பெண்ணுடன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு தர்ணீஷ் ( வயது ஆறு) லக்சன் (ஒன்றரை வயது) ஆகிய இரு ஆண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், கணவன் - மனைவி இருவருக்குமிடையே ஏற்பட்ட குடும்பத் தகராறால் தாய் வீட்டில் சில காலம் தங்கியிருந்த பவித்ரா, சில தினங்களுக்கு முன்பு மீண்டும் கணவரது வீட்டிற்கு திரும்பியுள்ளார்.
தொடர்ந்து, நேற்று திராட்சை பழங்கள் ஏற்றிக்கொண்டு பிரபு வெளியூர் சென்றிருந்தவேளையில், பவித்ரா தனது இரு குழந்தைகளுக்கும் திராட்சை பயிர் செய்ய உபயோகப்படுத்தும் ரசாயன மருந்தினை குளிர் பானத்தில் கலந்து கொடுத்து, தானும் அருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இதில் குழந்தைகள் இருவரும் உயிரிழந்த நிலையில், உறவினர்கள் சிலர் பவித்ராவை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த சின்னமனூர் காவல்துறையினர் பவித்ராவின் கணவர் பிரபு, அவரது பெற்றோரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க : ஆவின் நிறுவனத்தை கண்டித்து விவசாயிகள் போராட்டம்!