புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டி (எ) ராஜேந்திரன். இவர் தனது மனைவி செல்வி மற்றும் முன்று குழந்தைகளுடன் வசித்துவருகிறார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு திருட்டு வழக்கில் ராஜேந்திரன் கைதுசெய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
இதற்கிடையே செல்வி ஏற்கனவே திருட்டு நகை ஒன்றை வாங்கி விற்றதாக காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் காவல் துறையினர் அவரை விசாரிப்பதற்காக கடந்த 15 நாள்களுக்கு முன்பு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், காவல் துறையினர் தன்னை விசாரணை என்ற பெயரில் துன்புறுத்துவதாகக் கூறி, செல்வி தனது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதையடுத்து காவல் துறையினர் தீயை அணைத்து, 50 விழுக்காடு தீக்காயமான நிலையில் செல்வியை ஆம்புலன்ஸ் மூலம் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். ஆனால், இன்று அவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலேயே உயிரிழந்தார்.