12ஆவது உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், நாட்டிங்ஹாமில் இன்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி, பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டது. இதில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஹோல்டர் முதலில் பந்துவீச தீர்மானித்தார். அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 24.1 ஓவர்களிலேயே 105 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
பாகிஸ்தான் அணியில் பாபர் அசாம், ஃபகர் சமான், முகமது ஃஹபிஸ், வஹாப் ரியாஸ் ஆகிய நான்கு வீரர்கள்தான் இரட்டை இலக்கு ரன்களில் ஆட்டமிழந்தனர். அவர்களைத் தவிர மற்ற ஆறு வீரர்கள் ஒற்றை இலக்கு ரன்னில் பெவிலியனுக்கு திரும்பியது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிபட்சமாக ஓஷானே தாமஸ் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதைத்தொடர்ந்து, 106 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி ஒருநாள் கிரிக்கெட் போட்டியைப் போல் ஆடாமல் டி20 கிரிக்கெட் போட்டியைப் போல அதிரடியாக ஆடியது. குறிப்பாக, அணியில், கெயில் ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே அதிரடி காண்பித்தார். மறுமுனையில், ஷாய் ஹோப், டேரன் பிராவோ ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தாலும், கெயில் 34 பந்துகளில் ஆறு பவுண்டரிகள், மூன்று சிக்சர்கள் என 50 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அவரைத் தொடர்ந்து வந்த நிகோலஸ் பூரான் பவுண்டரிகளும், சிக்சர்களுமாக பறக்க விட்டார். இதனால், வெஸ்ட் இண்டீஸ் அணி 13.4 ஓவர்களிலேயே மூன்று விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எளிதாக எட்டியது. இதன் மூலம், வெஸ்ட் இண்டீஸ் அணி இப்போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கில் மட்டும்தான் அசத்துவார்கள். பந்துவீச்சில் சொதப்புவார்கள் என்று விமர்சித்தவர்களுக்கு, வெஸ்ட் இண்டீஸ் அணி இன்றைய போட்டியில் தக்கப் பதிலடி தந்துள்ளது. இதைத் தொடர்ந்து, கார்டிஃப் நகரில் நாளை நடைபெறவுள்ள மூன்றாவது போட்டியில் நியூசிலாந்து அணி, இலங்கை அணியை எதிர்கொள்கிறது.