விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் தரைமட்டத்திலிருந்து சுமார் 4,500 அடி உயரத்தில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில்.
இந்த கோயிலுக்கு மாதந்தோறும் அமாவாசை, பெளர்ணமி நாட்கள் மட்டுமே பக்தர்கள் கோயிலுக்கு செல்ல வனத்துறை அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாக கரோனா தொற்று காரணமாக பக்தர்கள் கோயிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. பின்னர் தமிழ்நாடு அரசு கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கலாம் என அறிவித்தது.
அதைத் தொடர்ந்து இன்று மஹாளய அமாவாசையை முன்னிட்டு கடந்த 15ஆம் தேதி முதல் நாளை வரை நான்கு நாட்கள் பக்தர்கள் கோயிலுக்கு சென்று தரிசிக்க கோயில் நிர்வாகம் சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று மஹாளய அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி கோயிலுக்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து அதிகாலை முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்தனர்.
கரோனா அச்சம் காரணமாக கோயில் நிர்வாகம் காலை 7 மணி முதல் மதியம் ஒரு மணி வரை மட்டுமே பக்தர்கள் கோயிலுக்கு வர அனுமதி அளித்துள்ளது. உடல் வெப்ப பரிசோதனை செய்த பின்னரே பக்தர்கள் அனுமதிக்கபட்டனர். கோயிலுக்கு வந்த குழந்தைகள், முதியவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.