தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் வைரஸ் பரவலை தடுக்க மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் அவசர தேவை மற்றும் அத்தியாவசிய பணிகளுக்கு இ பாஸ் பெற்றுக்கொண்டு பிற மாவட்டங்களுக்கு செல்ல அனுமதி வழங்கப்படுகிறது.
தற்போது கோவையில் கரோனா வைரஸ் அதிவேகமாக பரவிவருவதால் மாவட்ட எல்லையில் சோதனையை பலப்படுத்துமாறு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியபடி, மாவட்டத்தில் அனைத்து சோதனை சாவடிகளிலும் பலத்த சோதனைக்கு பின்னரே வெளி மாவட்ட வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில் காவல் துறையினருடன் தேசிய மாணவர் படையினர் இணைந்து நேற்று முதல் சோதனை சாவடியில் பணியில் ஈடுபட்டுள்ளனர். கோவை மாவட்ட எல்லையான கருமத்தம்பட்டி சோதனைச்சாவடி, சூலூர் காங்கேயம்பாளையம் சோதனைச்சாவடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 75 தேசிய மாணவர் படையினர் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர். சுழற்சி முறையில் இவர்கள் காலை முதல் மாலைவரை பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
காவல் துறைக்கு துணையாக இவர்கள் இந்த சோதனை பணியில் ஈடுபட்டுள்ளதால் வெளி மாநிலம் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து வரக்கூடிய அனைத்து வாகனங்களையும் கண்காணிக்க முடியுமென சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.