கரோனா பெருந்தொற்று பாதிப்பினால் 60 நாட்களுக்கும் மேலாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் வேலையிழந்து வீட்டில் முடங்கி உள்ளனர். இந்நிலையில், வெளி மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டில் குடிபெயர்ந்த தொழிலாளர்கள் வேலையின்றி தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்ப விருப்பம் தெரிவித்தனர். இதையடுத்து, மாவட்ட நிர்வாகத்திடம் சொந்த ஊர் செல்வதற்காக பதிவு செய்தனர்.
இதனிடையே, திண்டுக்கல்லில் ஆயிரத்து 524 உத்திரப் பிரதேச தொழிலாளர்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு சிறப்பு ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். இதற்காக திண்டுக்கல், மதுரை, தென்காசி, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் பணிபுரிந்து வந்த உத்தரப் பிரதேச தொழிலாளர்கள் சிறப்பு வாகனங்கள் மூலம் திண்டுக்கல் அழைத்து வரப்பட்டனர். அங்கு மருத்துவ பரிசோதனைக்குப் பின்னர் ரயில் நிலையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.
சொந்த ஊர்களுக்கு பயணிப்பது குறித்து பேசிய அகிலேஷ், "உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் இருந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஸ்வீட் கடை ஒன்றில் பணிபுரிந்து வந்தேன். ஊரடங்கு உத்தரவு காரணமாக வேலை இல்லாமல் போனாலும் கடை உரிமையாளர் உணவளித்ததால் பசி இல்லாமல் இருந்தோம். ஆனால் ஊதியம் வழங்கவில்லை. தொடர்ந்து வேலை இல்லாத காரணத்தினால் சொந்த ஊருக்கு திரும்ப பதிவு செய்தேன். இன்று சொந்த ஊருக்கு சென்றாலும் தமிழகம் திரும்பி வர விரும்பவில்லை. என்ன ஆனாலும் எனது சொந்த ஊரிலேயே இருப்பது என முடிவு செய்துவிட்டேன்" என்று கூறினார்.
இது குறித்து பேசிய சுரஜ் அகமது, "உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து வேலைதேடி தமிழ்நாடு வந்தோம். நானும் எனது சகோதரனும் திருச்சியில் உள்ள ஜூஸ் கடையில் வேலை பார்த்து வந்தோம். ஊரடங்கு உத்தரவு காரணமாக வேலை இல்லாமல் போனதால் எங்கள் ஊர்களுக்கு திரும்புகிறோம். ஆனால் தமிழ்நாடு வருவது குறித்து முடிவு செய்யவில்லை" என்று கூறினார்.