சென்னை ராயபுரம் மண்டலத்திற்குட்பட்ட அண்ணா பிள்ளைத் தெருவில் கோவிட்-19 சிறப்பு மருத்துவ முகாமை அமைச்சர் ஜெயக்குமார் இன்று (ஜூலை 1) தொடங்கி வைத்தார். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "உலகளாவிய பெருந்தொற்று நோயான கோவிட்-19 பரவலைத் தடுக்க 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட களப்பணியாளர்கள் கரோனா முன்னெச்சரிக்கை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
தங்களது உயிரை கூட புறந்தள்ளிவிட்டு, மக்களுக்காக இரவு பகலாக உழைத்துவரும் அனைத்து மருத்துவர்களுக்கும், மருத்துவ பணியாளர்களுக்கும் மருத்துவ தின வாழ்த்துக்களைத் தெரிவித்து கொள்கிறேன். சென்னையில் அடர்த்தியான குடிசைப் பகுதிகளில் தன்னார்வலர்கள் மூலம் நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியதால் நல்ல பலன் கிடைத்துள்ளது.
சென்னையில் எதிர்பார்த்த முடிவுகள் விரைவில் கிடைக்கும். சென்னையில் கோவிட்-19 பரவல் முழு கட்டுப்பாட்டிற்குள் விரைவில் வந்துவிடும். உதயநிதி ஸ்டாலின் இ-பாஸ் வைத்துதான் தூத்துக்குடி சென்றார் என்றால் அதை ஏன் ட்விட்டரில் வெளியிடவில்லை. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உதயநிதிக்கு இ-பாஸ் கொடுக்கவில்லை. உதயநிதி ஸ்டாலின் தூத்துக்குடி பயணித்தது தொடர்பாக சட்டம் தன் கடமையை செய்யும்" என்று கூறினார்.