கோவை மாவட்டத்தை அடுத்துள்ள சுந்தராபுரம் பகுதியில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலை மீது காவிச் சாயம் வீசப்பட்ட விவகாரம் தமிழ்நாடு அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று காலை இந்த செய்தி காட்டுத்தீயாக சமூக வலைத்தளங்களில் பரவத்தொடங்கியதைத் தொடர்ந்து கோவையில் உள்ள திக, திவிக, தபெதிக, திமுக, மதிமுக, அமமுக, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட அரசியல் இயக்கத்தினர் பெரியார் சிலைக்கு அருகில் ஒன்றுக் கூடி, காவிச் சாயம் பூசிய சமூக விரோதிகளை கைது செய்யக் கோரி முழக்கங்கள் எழுப்பினர்.
தகவலறிந்து விரைந்துவந்த காவல்துறையினர், அவர்களை கலைந்து போகச் சொல்லி வலியுறுத்தினர்.
இந்த குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள் மீதும் வழக்கு பதிந்து, சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்தனர்.
இது குறித்து திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், " ஈராயிரம் ஆண்டுகால சமூக அழுக்கை வெளுத்தெடுத்தவர் மறைந்தும் உங்களை நிம்மதியிழக்க செய்கிறார் என்பதில் அடங்கியுள்ளது அவரின் வெற்றி எங்களின் வரலாறு.
பெரியாரின் சிந்தனைகளை வெல்ல முடியாத கோழைகள் இருட்டில் அவர் சிலையோடு மோதுவதும், அதனை ஆமாஞ்சாமி அடிமை அரசு வேடிக்கை பார்ப்பதும் கண்டிக்கத்தக்கது. மனிதக்குலம் மானமும், அறிவும் பெற உழைத்த பெரியாரைச் சீண்டுவதைச் சூழ்ச்சியால் வயிறு கழுவும் கும்பல் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என கூறியுள்ளார்.
கோவையில் பெரியார் சிலை மீது காவி சாயம் பூசப்பட்ட வழக்கில் போத்தனூர் அண்ணாநகர் பகுதியை சேர்ந்த பாரத் சேனா அமைப்பின் பொறுப்பாளர் அருண்கிருஷ்ணன் என்பவர் தானாக வந்து காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
கைது செய்யப்பட்ட அவரிடம் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.