சென்னை போரூர் அருகே சிலர் இருசக்கர வாகனத்தில் கஞ்சாவை விற்பனை செய்துவருவதாகக் கிடைத்த தகவலையடுத்து போரூர் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது போரூர் தனியார் மருத்துவமனை அருகே சந்தேகத்திற்கிடமாக இருசக்கர வாகனத்தில் சுற்றித்திரிந்த வளரவாக்கத்தைச் சேர்ந்த ரவி (67), சரத் குமார் (27) ஆகிய இருவரைப் பிடித்து காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.
அவர்கள் வாகனத்தைச் சோதனை செய்தபோது அதில் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினர் அவர்களின் முகவரியைக் கேட்டுள்ளனர். அதற்கு அவர்கள் போலியான முகவரியை கொடுத்துள்ளனர்.
இதையடுத்து, நுண்ணறிவுப் பிரிவு தலைமைக் காவலர் டார்வின், இருவரின் உண்மையான முகவரியைக் கண்டுபிடித்து, மாங்காட்டை அடுத்த பெரிய கொளுத்துவான்சேரியில் உள்ள வீட்டில் சோதனை செய்தபோது, அங்கு சுமார் 30 கிலோ கஞ்சா பதுக்கிவைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர், இருவரையும் கைதுசெய்த காவல் துறையினர், அவர்களிடமிருந்து இரண்டு இருசக்கர வாகனங்கள், 30 கிலோ கஞ்சா, 35 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.
இவர்கள் ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து கஞ்சாவை மொத்தமாக வாங்கிவந்து, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கிலோ கணக்கில் சப்ளை செய்துவந்ததும் விசாரணையிக்ல் தெரியவந்தது.