திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டுவந்த ராஜ்குமார், நேதாஜி ஆகிய இருவருக்கு முறையே நான்கு, ஆறு மாதகால சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
மீஞ்சூர் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் ராஜ்குமார், நேதாஜி ஆகியோர் வசித்துவருகின்றனர். இந்த இருவர் மீதும் கொலை, கொலை முயற்சி, வழிப்பறி கொள்ளை உள்ளிட்ட வழக்குகள் இருக்கின்றன.
பொன்னேரி வருவாய் கோட்டாட்சியர் முன்னிலையில் எவ்வித குற்றச் செயல்களிலும் ஈடுபட மாட்டோம் எனப் பிரமாணப்பத்திரம் எழுதிக் கொடுத்ததன் அடிப்படையில் சிறையில் அடைக்கப்படாமல் நீதிமன்றக் காவலில் இருந்துவந்தனர்.
இந்நிலையில், கொண்டகரை, சீமாவரம் பகுதிகளில் பொதுமக்களிடம் பணம் கேட்டு அச்சுறுத்தியதால், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டுவந்த ராஜ்குமார் என்பவருக்கு நான்கு மாதமும், நேதாஜி என்பவருக்கு ஆறு மாத காலமும் தண்டனை வழங்கப்பட்டது. இதனையடுத்து அவர்கள் இருவரும் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.