வாஷிங்டன்: பொருளாதார வீழ்ச்சியைக் காரணம் காட்டி எச்1 பி, எல் 1, ஜே 1 விசாக்கள் வழங்குவதை நிறுத்தி வைப்பது குறித்து அமெரிக்க அரசு பரிசீலித்து வருகிறது.
கரோனா நோய்க் கிருமி தொற்றால் அமெரிக்கர்கள் பெரும் வேலையிழப்பைச் சந்தித்துள்ளனர். இதனால் எச்1 பி, எச்2 பி, ஜே 1 ஆகிய விசாக்களை நிறுத்திவைக்க ட்ரம்ப் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. குடியேற்ற உரிமை இல்லாத வெளிநாட்டவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு ஏப்ரல் 24ஆம் தேதி முதல் 60 நாட்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தடை ஜூன் 22ஆம் தேதி முடிவடைய உள்ள நிலையில், அமெரிக்காவில் வெளிநாட்டவர் பணிபுரிவதற்கான எச்1 பி விசாக்கள் வழங்குவதை அக்டோபர் 1 முதல் ஓராண்டுக்கு நிறுத்தி வைப்பது பற்றி டிரம்ப் நிர்வாகம் பரிசீலித்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் எல் 1, ஜே 1 விசாக்களையும் நிறுத்தி வைக்க பரிசீலித்து வருகிறது.
குடியேற்ற கொள்கை திட்டத்துக்கு தடை: ட்ரம்புக்கு அதிர்ச்சி கொடுத்த நீதிமன்றம்!
அதே நேரத்தில் கோவிட்-19 நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவப் பணியாளர்கள், உணவு வழங்கல் நிறுவனங்களுக்குப் பணிக்கு வருபவர்கள் இதனால் பாதிக்கப்பட மாட்டார்கள் எனக் கூறப்படுகிறது. எச்1 பி விசாவுக்கான கட்டணத்தை 20 ஆயிரம் டாலராக உயர்த்தவும் டிரம்ப் நிர்வாகம் பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது.