அமெரிக்காவில் காவல் துறை அலுவலர் ஒருவர், கறுப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்பவரின் கழுத்தில் 9 நிமிடங்களுக்கும் மேலாக, தன் காலணியால் மிதித்த காட்சி வைரலாக, ஜார்ஜ் ஃப்ளாய்ட்டின் மரணச் செய்தி அமெரிக்காவில் பெரும் போராட்டங்களைக் கிளப்பியது.
ஜார்ஜ் ஃப்ளாய்ட் காவல் துறையினரின் வன்முறைக்குக் கொல்லப்பட்டார் என்று ஆங்காங்கே வன்முறைகள் வெடிக்கத் தொடங்கியுள்ளன. இந்தச் சம்பவம் அமெரிக்காவில் தொடரும் நிறவெறிகளுக்கு எதிரானப் போராட்டமாகவும் மாறியுள்ளது.
இச்சூழலில் போராட்டக்காரர்களுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பிற்கு எதிராக, சர்வதேச அளவில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
அந்த வகையில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ட்ரம்ப்பை கடுமையாக விமர்சித்துள்ளார். அதில், 'அமெரிக்காவில் நடப்பதை நாங்கள் கலக்கத்துடன் பார்த்துக் கொண்டு இருக்கிறோம். இது மக்களை ஒருங்கிணைப்பதற்கான நேரம். அவர்களின் குரல்களைக் கேட்பதற்கான நேரம்' என்று ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் வெகுண்டெழுந்துள்ள போராட்டங்களுக்கு மத்தியில் கடந்த 24 மணி நேரத்தில் 15 ஆயிரத்து 846 பேருக்கு கரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.