ஈரோடு கருங்கல்பாளையத்தைச் சேர்ந்தவர் மேகநாதன். இவர் சரக்கு லாரி ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். நேற்றிரவு நான்கு சுமை தூக்கும் தொழிலாளர்களுடன் திருப்பூர் மாவட்டம் காங்கேயத்திற்குச் சென்று அங்கு சரக்குகளை இறக்கிவிட்டு வெள்ளோடு வழியாக திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது, வெள்ளோட்டில் லாரியைத் தடுத்து நிறுத்திய வெள்ளோடு காவல் ஆய்வாளர், மேகநாதனை கீழிறங்கக் கூறி கடுமையாகத் தாக்கி காயப்படுத்தியுள்ளார். மேலும் அவர்கள் சென்ற லாரியை பறிமுதல் செய்து வெள்ளோடு காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றார்.
இதனிடையே, படுகாயங்களுடன் வலியால் துடித்துக் கொண்டிருந்த மேகநாதனை சுமைதூக்கும் தொழிலாளர்கள் ஈரோடு அரசினர் தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தமிழ்நாடு அனைத்து வாகன ஓட்டுநர்கள் சங்கத்தின் சார்பில் எவ்வித காரணமுமின்றி ஓட்டுநரை அடித்துக் காயப்படுத்தி அவரது லாரியை பறிமுதல் செய்துள்ள காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தியும், ஆய்வாளர் ஓட்டுநரை அடித்துக் காயப்படுத்தியதற்கான காரணத்தைக் கண்டறிந்து தெரிவித்திட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திகணேசனிடம் புகார் மனுக்கள் வழங்கப்பட்டன. மனுக்களைப் பெற்றுக் கொண்ட காவல் கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளரிடம் விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.