விவசாயத்திற்கு வழங்கப்பட்டுவந்த இலவச மின்சாரம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பதை தமிழ்நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் எதிர்த்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நேற்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், கரோனா பரவலை காரணம் காட்டி காவல் துறையினர் அனுமதி மறுத்ததாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து, இலவச மின்சாரத்தை தடை செய்யக் கூடாதென வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன் கைகளை உயர்த்தியவாறு நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், மாவட்ட ஆட்சியர் ராஜாமணியை நேரில் சந்தித்து தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மனு ஒன்றை அளித்துள்ளனர்.
இது தொடர்பாக ஊடகங்களிடம் பேசிய தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் பழனிசாமி, "இலவச மின்சாரத்தை கொண்டு விவசாயிகள் சிறப்பான முறையில் விவசாயம் செய்துவருகின்றனர். இந்நிலையில் மத்திய அரசானது, கோவிட்-19 வைரஸ் பெருந்தொற்றுநோய் பரவலைத் தடுக்க அறிவித்த ஊரடங்கை பயன்படுத்தி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுவந்த இலவச மின்சாரத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.
இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட்டால், விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவர். விவசாயிகள் போராடி பெற்ற இந்த உரிமையை ரத்து செய்வதே மிகவும் கண்டிக்கத்தக்கது.
மின்சாரத்தை தனியார் துறைக்கு தாரைவார்ப்பது, இலவச மின்சாரத்தை ரத்து செய்வது விவசாயிகளை கடுமையாக பாதிக்கும். எனவே, தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தமிழ்நாடு அரசு, எதிர்க்கட்சியினர் என அனைவரும் ஒன்றாக இணைந்து இலவச மின்சாரத்தை ரத்து செய்வதை எதிர்க்க வேண்டும்.
எந்த ஒரு நிலையிலும் தமிழ்நாட்டிலும் சரி, இந்தியாவிலும் சரி விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் என்பது ரத்து செய்யப்படக்கூடாது. அப்படி செய்யப்பட்டால் மாபெரும் எதிர்வினையை அரசு எதிர்க்கொள்ளும்" என்றார்.