பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சியில் திருவள்ளூர் மாவட்டம் 25ஆவது இடத்திலிருந்து 22ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளதாக மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் திருவள்ளூர் மாவட்டத்தில் 18,635 ஆண்களும், 21,469 பெண்களும் என மொத்தம் 40,104 மாணவர்கள் தேர்வு எழுதியிருந்தனர்.
இவர்களில் 16,367 ஆண்களும், 20192 பெண்களும் என மொத்தம் 36,559 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் ஆண்களின் தேர்ச்சி விழுக்காடு 87.83 ஆகவும், பெண்களின் தேர்ச்சி விழுக்காடு 94.05 ஆகவும், மொத்தம் தேர்ச்சி விழுக்காடு 91.16 ஆக உள்ளன.
கடந்த ஆண்டு தேர்வைக் காட்டிலும் 1.67 கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் 104 அரசு பள்ளிகளில் 13,633 மாணவர்கள் தேர்வு எழுதி 10,782 மாணவர்கள் தேர்ச்சி பெற்று அரசுப் பள்ளிகளில் 79.0 9 விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ளன.
மாற்றுத்திறனாளி தேர்வர்களின் கண் பார்வையற்றவர்கள் 51, காது கேளாதோர் 12, இதர வகையினர் 68 ஆக மொத்தம் 131பேர் தேர்வு எழுதியிருந்தனர். இதில் கண் பார்வையற்றவர் 47, காது கேளாதோர் 7, இதர வகையினர் 53 ஆக மொத்தம் 117 மாற்றுத்திறனாளிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
புழல் மத்திய சிறையில் 16 தேர்வர்கள் தேர்வு எழுதி 16 தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றுள்ளனர் மாவட்டத்தில் 103 பள்ளிகள் நூற்றுக்கு நூறு சதவீதம் விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் நுண்ணுயிரியல், உயிரியல், வேதியல், தொடர்பியல், ஆங்கிலம் ஆகிய பாடங்களில் 100 விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாநில அளவில் கடந்த ஆண்டு 25ஆவது இடத்திலும் இந்த ஆண்டில் 22ஆவது இடத்திலும் திருவள்ளூர் மாவட்டம் முன்னேறியுள்ளது” என அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் திருவள்ளூர் மாவட்ட முதல்நிலை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி மற்றும் திருவள்ளூர் மாவட்ட முதல் நிலை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் திருவரசு ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: இதுவரை இல்லாத அளவிற்கு அதிகரித்த கரோனா பாதிப்பு!