தேனி மாவட்டத்தில் கரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இவற்றில் பெரியகுளம், அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் பாதிப்பு அதிகம் ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டம், பெரியகுளம் நகராட்சிக்குட்பட்ட 30 வார்டுகளிலும் தற்போது வரை 580 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஐந்து பேர் உயிரிழந்தனர். நாள்தோறும் ஏறக்குறைய 100 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அதிகரித்து வரும் கரோனா தொற்றை கட்டுப்படுத்த பெரியகுளம் பகுதி வணிகர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று (ஆகஸ்ட் 5) நடைபெற்றது. இக்கூட்டத்தில், தேனி மாவட்ட சிறப்பு வருவாய் அலுவலர் (தேசிய நெடுஞ்சாலைத்துறை) தியாகராஜன், நகராட்சி ஆணையர், வணிகர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது மருத்துவமனை, மருந்தகங்கள், பால் விற்பனையகங்கள், ஏடிஎம் தவிர்த்து மற்ற அனைத்து வணிக நிறுவனங்கள், கடைகள் ஆகியவை காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டும் செயல்படுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்த புதிய அறிவிப்பு ஆகஸ்ட் 6ஆம் தேதி தேதி முதல் 15 வரையில் நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தொற்று பரவலை கட்டுப்படுத்த பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தகுந்த இடைவெளியை பின்பற்றுதல், முகக் கவசம் கட்டாயம் அணிதல் உள்ளிட்டவை கடைபிடிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது.