உலகை அச்சுறுத்திவரும் கரோனா வைரசின் தாக்கம் தமிழ்நாட்டில் தீவிரம் அடைந்துள்ளது. இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக்கட்டுப்படுத்தும் நோக்கில் மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முகக்கவசம் அணிய வேண்டும், தகுந்த இடைவெளி உள்ளிட்டவற்றைப் பின்பற்ற வேண்டும் என அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடலூரில் மேலும் 29 பேருக்கு கரோனா தொற்றியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 821 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த மாதம் சென்னை புழல் சிறையில் இருந்து பதினைந்து சிறைக்கைதிகளை கடலூர் மத்திய சிறைக்கு கொண்டு வந்தனர். இவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் ஏழு கைதிகளுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று மேலும் மூன்று சிறைக்கைதிகளுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செயப்பட்டுள்ளது. இதனால் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சிறைக் கைதிகளின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.
இதனைத்தொடர்ந்து கடலூர் மத்திய சிறையில் உள்ள 800 சிறை கைதிகளுக்கும் கரோனா பரிசோதனை செய்ய சிறைத்துறை நிர்வாகத்தினர் முடிவு செய்துள்ளனர். அதேபோல் சிறை காவலர்களுக்கும் தொற்று அறிகுறி தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும் என சிறைத்துறை நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடலூர், விருத்தாசலம், சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடலூர் மாவட்டத்தில் சிகிச்சைப் பெற்றுவந்தவர்களில் இதுவரை 489 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.