தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் சிவகுருநாதன் தெருவில் வீட்டு வேலை, பூ கட்டும் வேலை, கட்டடத் தொழில், ஆர்க்கெஸ்டா பாடகி, உணவகப் பணி என பல்வேறு தினக்கூலி வேலை செய்து வரும் பெண்கள், தங்கள் குடும்ப தேவைக்காக, எல்&டீ, ஆசிர்வாத், சூர்யாடே, ஐடிஎப்சி, பேட், எச்டிஎப்சி, ஸ்ரீஜோதி, நாகவள்ளி, ராஜ் போன்ற நிறுவனங்களிடமிருந்து கடன் பெற்று இதுவரை முறையாக வட்டியுடன் செலுத்தி வந்துள்ளனர்.
இந்நிலையில் கரோனா ஊரடங்கினால், வேலையின்றி குடும்பம் நடத்தவே கடந்த மூன்று மாத காலமாக மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர். இவர்களிடம் சுயஉதவிகுழு நிறுவனங்கள் கடன்களை உடனடியாகக் கட்டச் சொல்லியும், வட்டி கட்டச் சொல்லியும் வற்புறுத்துவதாகக் கூறப்படுகிறது.
மேலும், மனிதாபிமானமற்ற முறையில், பெண்களை இழிவாகவும், தரம் தாழ்ந்த வார்த்தைகளைப் பயன்படுத்தி திட்டுவதாகவும் கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதால், இப்பிரச்சனைக்கு தீர்வு காண தங்களுக்கு மூன்று மாத கால அவகாசம் வழங்க சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அறிவுறுத்த வேண்டி கோட்டாட்சியர் வீராசாமியை 20க்கும் மேற்பட்ட சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த பெண்கள் நேரில் சந்தித்து முறையிட்டனர். அப்போது சிந்து பைனான்ஸ் அடகுக் கடை உரிமையாளரிடமிருந்து பிணையாக வைத்துள்ள தங்களது குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை மீட்டுத் தருமாறும் கோரிக்கை விடுத்தனர்.