சிட்னி: அமெரிக்காவில் கருப்பினத்தவர் ஜார்ஜ் ஃப்ளாய்ட் காவல் துறையினரால் கொல்லப்பட்டதைக் கண்டித்து ஊரடங்கு உத்தரவையும் மீறி சிட்னியில் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
'என்னால் சுவாசிக்க முடியவில்லை' ஜார்ஜ் ப்ளாய்ட் தான் மரணிக்கும் தருவாயில் கூறிய வார்த்தைகளை, முழக்கங்களாக எழுப்பி ஆஸ்திரேலிய நாட்டின் தலைநகர் சிட்னியில் கறுப்பின மக்களுக்கு ஆதரவாக பெரும் போராட்டம் நடைப்பெற்றது.
மேலும், கறுப்பர்களும் மனிதர்கள் தான், அவர்களுக்கு இங்கு வாழ எல்லா தகுதியும் உள்ளது என்பது போன்ற முழக்கங்களும் எழுப்பப்பட்டன.
அமெரிக்காவின் மின்னபொலிஸ் பகுதியில் ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்ற நபரை, காவலர்கள் கழுத்தில் கால்வைத்து அழுத்தினர். இதில் அவர் உயிரிழந்தார்.
இதுதொடர்பான காணொலி வெளியான நிலையில், கறுப்பினத்தவர்களுக்கு எதிரான அடக்குமுறை நீடிப்பதாகக் கூறி பல்வேறு இடங்களிலும் ஜார்ஜின் மரணத்துக்கு நீதி கேட்டு போராட்டங்கள் வெடித்தன.
மின்னசொட்டா மாநிலத்தை தொடர்ந்து லாஸ் ஏஞ்சலிஸ், சிகாகோ, மியாமி உட்பட பல்வேறு நகரங்களிலும் போராட்டம் வலுவடைந்து வருகிறது. போராட்டங்களின் போது பல்வேறு இடங்களில் வன்முறைச் சம்பவங்களும் அரங்கேறின.
இதனால் காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதற்கிடையில், அட்லாண்டா, லாஸ் ஏஞ்சலிஸ், பிலடெல்பியா, டென்வர், சின்சினாட்டி, போர்ட்லேண்ட், லூயிஸ்வில், கெண்டக்கி, ஓரேகான் ஆகிய நகரங்களில் ஊரடங்கை மீறி போராட்டம் வெடித்தது.
இதனிடையே வெள்ளை மாளிகையை பொதுமக்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். தடுப்புகளைத் தாண்டி முன்னேறிய அவர்கள் அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இதனால் பாதுகாப்பு கருதி வெள்ளை மாளிகை முன் ராணுவ கவச வாகனங்கள், டேங்குகள் நிறுத்தப்பட்டிருந்தன.
இதனிடையே ஜார்ஜ் ஃப்ளாயிட்டின் மரணத்திற்கு நீதிகேட்டு அமெரிக்கா மட்டுமின்றி இங்கிலாந்திலும் போராட்டங்கள் வெடித்துள்ளன. கறுப்பின மக்களும் வாழவேண்டும் என்ற பொருள் கொண்ட பி.எல்.எம் இயக்கம் சார்பில் லண்டன் நகர வீதிகளில் ஆயிரக்கணக்கானோர் பேரணி நடத்தினர்.
இதனைப் போன்றே புகழ்பெற்ற டிராஃபால்கர் சதுக்கத்தின் முன்பாக நூற்றுக்கும் அதிகமான மக்கள் கூடியிருந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். லண்டனில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் முன்பாகவும் ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் ஒன்றிணைந்து ஜார்ஜ் ஃப்ளாயிட் மரணத்திற்கு நீதிகேட்டும், கறுப்பின மக்களும் வாழவேண்டும் என்று முழக்கங்களை எழுப்பியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.