மனைவியை அரிவாளால் வெட்டி கொலை செய்த கணவர் கைது - husband killed his wife
திருவாரூர்: மனைவியை அரிவாளால் வெட்டி கொலை செய்த கணவரை காவல்துறையினர் கைதுசெய்தனர்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே நெடும்பலம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (65) ஐஸ் வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மனைவி பானுமதி (60).
இவர் நேற்று மதியம் உணவு சமைத்துக் கொண்டிருந்த போது எரிந்து கொண்டிருந்த அடுப்பை செல்வராஜ் தண்ணீரை ஊற்றி அணைத்ததாக கூறப்படுகிறது. இதனால் பானுமதி கணவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த செல்வராஜ் பக்கத்திலிருந்த அரிவாளை எடுத்து மனைவி தலையில் வெட்டினார். இதில் பலத்த காயமுற்ற பானுமதி வலியால் துடித்தார்.
பானுமதியின் அலறல் சப்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் ஒடிவந்தனர். இந்நிலையில் இரத்த வெள்ளத்தில் துடிதுடித்த பானுமதியை மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது குறித்து அவருடைய மகன் குமார் கொடுத்த புகாரின் பேரில் திருத்துறைப்பூண்டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.